திருமங்கலம் சார்–பதிவாளர் அலுவலகத்தில் தொடரும் முறைகேடுகள் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் திடுக்கடும் தகவல்கள்


திருமங்கலம் சார்–பதிவாளர் அலுவலகத்தில் தொடரும் முறைகேடுகள் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் திடுக்கடும் தகவல்கள்
x
தினத்தந்தி 23 Jan 2019 4:27 AM IST (Updated: 23 Jan 2019 4:27 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் சார்–பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் தொடர்ந்து நடந்து வந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

திருமங்கலம்,

திருமங்கலம் சார்–பதிவாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத பணத்தை கைப்பற்றினர். இது தொடர்பாக, அவர்கள் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, திருமங்கலம் சார்–பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பல்வேறு பத்திரங்கள் தினந்தோறும் பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்ற தகவல் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அரசு பத்திர பதிவுக்கு தடை விதித்துள்ள நிலங்களை கூட, விதிகளை தளர்த்தி முறைகேடாக பதிவு செய்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, பத்திர பதிவு எழுத்தர்களின் ஆதிக்கத்தில் திருமங்கலம் சார் பதிவாளர் அலுவலகம் இருந்துள்ளது. இதில், ஒரு சில ஆவண எழுத்தர்கள் பத்திர பதிவு அலுவலகத்துக்கு நேரில் வராமல், ஆவணங்களில் கையெழுத்திடுகின்றனர். ஒரு சிலர் வெளியூரில் இருந்து கொண்டு, ரப்பர் ஸ்டாம்புகளை கொடுத்து அவர்களைப்போல போலியாக கையெழுத்து போட அனுமதி கொடுத்துள்ளனர். அதாவது, உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வெளியூரில் இருந்து கொண்டு, பத்திர பதிவுக்கு என தனியாக கமி‌ஷன் மட்டும் பெற்றுக்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இதனால், முறைகேடான ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்கள் உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் பெயரில் போலியாக கையெழுத்திடும் நபர்களின் ஆதிக்கமும் பத்திர பதிவு அலுவலகத்திற்குள் தலைவிரித்தாடுகிறது. இவர்கள் பணத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு, பத்திர பதிவு அலுவலகத்தில் வேலைபார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக கொடுத்து தங்களது இஷ்டம் போல பத்திர பதிவு மேற்கொண்டு வந்துள்ளனர்.

இதனால், திருமங்கலம் தாலுகாவில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள நிலங்கள், காலிமனை தொடர்பான பத்திரபதிவு குறித்து பல்வேறு சிவில் வழக்குகள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படுகின்றன. எனவே, இந்த முறைகேடுகள் தொடர்பாக பத்திரபதிவுத்துறை தலைவர் அலுவலகம் நேரடியாக விசாரணை நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story