எத்தனை தலைவர்கள் கூட்டு சேர்ந்தாலும் பிரதமர் மோடியை வீழ்த்த முடியாது - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே பேட்டி


எத்தனை தலைவர்கள் கூட்டு சேர்ந்தாலும் பிரதமர் மோடியை வீழ்த்த முடியாது - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே பேட்டி
x
தினத்தந்தி 23 Jan 2019 12:30 AM GMT (Updated: 23 Jan 2019 12:23 AM GMT)

எத்தனை தலைவர்கள் கூட்டு சேர்ந்தாலும் பிரதமர் மோடியை வீழ்த்த முடியாது என்று மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

புதுச்சேரி,

மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே புதுச்சேரி வந்தார். இங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் 13 லட்சம் மக்கள் தொகை இருந்தபோதும் 16 லட்சம் ஜன்தன் வங்கிக் கணக்குகள் உள்ளன. நாடு முழுவதும் 33 கோடி பேர் ஜன்தன் வங்கிக் கணக்கை தொடங்கியுள்ளனர். அதேபோல முத்ரா வங்கிக் கடன் திட்டத்தில் புதுவையில் மட்டும் 36 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர். ஒரு நபருக்கு எவ்வித பிணையும் இன்றி கடனாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. புதுவையில் இந்த திட்டத்தின்கீழ் ரூ.500 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், முத்ரா கடன் திட்டத்தில் நாடு முழுவதும் 26 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அம்பேத்கர் அறக்கட்டளை சார்பில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் தலித்களுக்கு ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு சிகிச்சை பெறும் வகையில் மருத்துவக் காப்பீடு திட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே அமல்படுத்தியுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருப்பது வரவேற்புக்குரியது. இது மோடி அரசின் வரலாற்று சாதனை. மக்கள்தொகையில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு இப்போது 27 சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மக்கள்தொகை அடிப்படையில் 37 சதவீதம் பிற்படுத்தப்பட்டோர் இருப்பதால் அவர்களுக்கான இடஒதுக்கீட்டை 37 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

மேலும், சட்டப்பேரவை, மக்களவை தொகுதிகளில் தலித்களுக்கு தனியாக தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது போல மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு அரசியல் ரீதியான இடஒதுக்கீடு அவசியம் வழங்க வேண்டும்.

கொல்கத்தாவில் பிரதமர் மோடிக்கு எதிராக 23 கட்சித் தலைவர்கள் கூடி பேரணி நடத்தியுள்ளனர். எத்தனை தலைவர்கள் கூட்டு சேர்ந்தாலும், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மோடியை வீழ்த்த முடியாது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் வலுவான ஆஸ்திரேலிய அணியை கோலி தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்தது. அதுபோல எத்தனை வலுவான தலைவர்கள் சேர்ந்தாலும் அதைவிட வலுவான தலைவராக மோடி திகழ்வதால் கோலி போல அவரும் தொடர்ந்து வெற்றி பெறுவார்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்தவரான மோடி பிரதமராக இருப்பதால் அவரை பதவியில் இருந்து இறக்க உயர் சாதியினர் முயற்சி செய்கின்றனர். அவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைக்காது. உத்தரபிரதேசத்தில் கடந்த மக்களவைத் தேர்தலின்போது மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 73 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியது. இந்த முறை மாயாவதி-அகிலேஷ் யாதவ் கூட்டணி சேர்ந்தாலும் பா.ஜ.க. அதே எண்ணிக்கையிலான தொகுதிகளை கைப்பற்றும்.

பா.ஜ.க. ஆதரவு பெற்று தான் 3 முறை முதல்-மந்திரியாக மாயாவதி பொறுப்பேற்றார். எனவே, அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தான் ஆதரவு தெரிவிப்பார்கள். மராட்டியம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 3 தொகுதிகளில் போட்டியிட எனது தலைமையிலான இந்திய குடியரசுக் கட்சி சார்பில் பா.ஜ.க.விடம் தெரிவித்துள்ளோம்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றினாலும் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு இல்லை. 3 முறை ஆட்சியில் இருந்த மத்திய பிரதேசத்தில் நூலிழையில் தான் பா.ஜ.க. வெற்றியை தவறவிட்டுள்ளது. ராஜஸ்தானில் தமிழகத்தை போல பா.ஜ.க., காங்கிரஸ் மாறி மாறி ஆட்சிக்கு வருவது இயல்பு தான்.

தமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துள்ளது. எனவே, அ.தி.மு.க. இயற்கையாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் என்ற நம்பிக்கை உள்ளது. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அ.தி.மு.க. இணைந்தால் அ.தி.மு.க. மேலும் வலுவடையும். அனைத்து சாதியினரையும் கொண்ட கட்சியாக பா.ஜ.க. மாறி வருகிறது.

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அம்பேத்கருக்கு சிலை அமைக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். அவரை நேரில் சந்திக்கும்போது இக்கோரிக்கையை வலியுறுத்துவேன்

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், சமூக நலத்துறை செயலாளர் அலைஸ்வாஸ், இயக்குனர்கள் ரகுநாதன், சாரங்கபாணி, யஷ்வந்தையா, மகளிர் மற்றும் மாற்று திறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குனர் அனிதா, போலீஸ் சூப்பிரண்டு பால கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், ஆதிதிராவிட மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி உதவித்தொகை, வன்கொடுமை தடுப்பு சட்டம், முதியோர் இல்லம் மற்றும் முதியோர் ஓய்வூதிய திட்டம், மாற்று திறனாளிகளுக்கான மேம்பாட்டு திட்டம், கலப்பு திருமணம், ஆதிதிராவிட மாணவர்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளி, துப்புரவு பணியாளர்கள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினருக்காக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் செயல்படுத்தப்படும் இதர திட்டங்கள் குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.

Next Story