உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் கலெக்டரிடம் பல்வேறு சங்கத்தினர் கோரிக்கை


உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் கலெக்டரிடம் பல்வேறு சங்கத்தினர் கோரிக்கை
x
தினத்தந்தி 24 Jan 2019 4:30 AM IST (Updated: 24 Jan 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று பல்வேறு சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி கப்பல் சரக்கு ஏற்றுவோர் இறக்குவோர் ஊழியர் சங்கம், தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கம், தூத்துக்குடி நகர லாரி புக்கிங் சங்கம், தூத்துக்குடி கப்பல் முகவர் சங்கம், தூத்துக்குடி துறைமுக உபகரணங்கள் கையாளுதல் சங்கம், தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட 12 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

ஸ்டெர்லைட் தொழிற்சாலை அறிவியல் பூர்வமான விளக்கங்களால் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுகிறது என்பதை எங்களால் உணர முடிகிறது. பல அந்நிய சக்திகள் மக்களிடையே ஊடுருவி, அவர்களின் உணர்ச்சியை தூண்டி தவறான பாதையில் வழிநடத்தி உள்ளனர். இதனால் ஆலைக்கு எதிராக தொடங்கப்பட்ட போராட்டத்தால் ஆலை மூடப்பட்டது. இதன் காரணமாக இந்த பகுதியில் உள்ள 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக 13 பேர் உயிர் இழந்துள்ளனர்.

மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த சிறப்பு குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர். அதன்படி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முடிவை ஏற்று ஆலையை மீண்டும் திறக்க உச்சநீதிமன்றமும் பரிந்துரை செய்து உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் கடந்த 8 மாதங்களாக தொழில் துறையை சேர்ந்த பல தரப்பட்ட மக்கள் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறோம்.

எனவே எங்களது கோரிக்கையை ஏற்று தூத்துக்குடியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

இதே போன்று தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 12 கிராம மக்கள் கடந்த 21-ந் தேதி கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-

நாங்கள் ஸ்டெர்லைட் ஆலையின் அருகில் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் இருந்து பலர் ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆலை மூடப்பட்டதால் நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பரிந்துரை செய்து உள்ளது. அதனை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை திறந்து எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர். 

Next Story