குளச்சல் நகராட்சியை கண்டித்து காங்கிரஸ் நிர்வாகி திடீர் போராட்டம்


குளச்சல் நகராட்சியை கண்டித்து  காங்கிரஸ் நிர்வாகி திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 29 Jan 2019 4:15 AM IST (Updated: 28 Jan 2019 10:32 PM IST)
t-max-icont-min-icon

குளச்சல் நகராட்சியை கண்டித்து காங்கிரஸ் நிர்வாகி திடீர் போராட்டம் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க கோரிக்கை.

குளச்சல்,

குளச்சல் அரசு விருந்தினர் மாளிகை அருகே கழிவு நீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் பல நாட்களாக கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதோடு, கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி அப்பகுதி மக்கள் குளச்சல் நகராட்சியில் கழிவு நீரை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், காங்கிரஸ் கட்சியினரும் இது தொடர்பாக மனு கொடுத்தனர். ஆனால், கழிவு நீர் அகற்றப்படவில்லை.  

இந்தநிலையில் நேற்று காலை திடீரென காங்கிரஸ் கட்சியின் மீனவர் பிரிவு நகர தலைவர் டேவிட்குமார், கழிவு நீர் தேங்கி கிடக்கும் பகுதிக்கு கையில் ஒரு நாற்காலியுடன் வந்தார். பின்னர், தான் கொண்டுவந்த நாற்காலியை கழிவுநீர் ஓடையின் அருகில் போட்டு அமர்ந்தார். துர்நாற்றம் காரணமாக முகத்தில் துணியை கட்டிக்கொண்டு கையில் காங்கிரஸ் கொடியை பிடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், கழிவு நீரை அகற்றாத நகராட்சியை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினார்.

இதுபற்றி தகவல் அறிந்த குளச்சல் நகராட்சி ஆணையாளர் யோகராஜ், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீஜித்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த காங்கிரஸ் மீனவரணி செயலாளர் சபின் உள்பட மீனவரணியினர் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் நகராட்சி ஆணையாளர், போராட்டத்தில் ஈடுபட்ட டேவிட்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர், ‘ஓடையை சீரமைக்க அரசிடம் நிதி கேட்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று(நேற்று) கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து அப்பகுதியில் கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று கூறினார். அதைத்தொடர்ந்து டேவிட்குமார் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Next Story