பிரதமர் மோடி திருப்பூர் வருகையால் கொங்கு மண்டலத்தில் பா.ஜனதா எழுச்சி பெறும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
பிரதமர் மோடி திருப்பூர் வருகையால் கொங்கு மண்டலத்தில் பா.ஜனதா எழுச்சிபெறும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
திருப்பூர்,
பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் புதுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் வாஜ்பாய் திடலில் வருகிற 10–ந்தேதி நடைபெற உள்ளது. இதில் கோவை, நீலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் ஆகிய நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்தவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
பொதுக்கூட்டம் நடைபெறும் திடலை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை ஆய்வு செய்தார். பொதுக்கூட்ட மேடை அமைய உள்ள இடம், வாகன நிறுத்த வசதி, மாநாட்டுக்கு வந்து செல்பவர்களுக்கான பாதை, பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதற்கான ஹெலிபேட் தளம் அமைய உள்ள இடம் உள்ளிட்ட விவரங்களை மத்திய மந்திரி கேட்டறிந்தார். மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஆய்வுகுறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
பிரதமர் மோடி கடந்த 27–ந் தேதி மதுரைக்கு வந்து தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். எய்ம்ஸ் மருத்துவமனையை அவர் தமிழகத்துக்கு தந்துள்ளார். மோடி தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் பல கோடி மதிப்பிலான திட்டங்களை தந்துள்ளார். தமிழகத்தின் மீது தனி அக்கறையோடு திட்டங்களை கொடுத்து வருகிறார். மதுரை பொதுக்கூட்டத்தில் எதிர்பார்ப்பையும் மீறி மிக அதிக அளவில் மக்கள் பங்கேற்றனர்.
அதுபோல் வருகிற 10–ந் தேதி திருப்பூரில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான மக்கள் வருவார்கள் என்று நம்புகிறோம். குறைந்தபட்சம் 2 லட்சம் பேர் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள். இதற்காக 70 ஏக்கர் பரப்பளவுள்ள இடம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி திருப்பூர் வருகையால் கொங்கு மண்டலத்தில் பா.ஜனதா புதிய உத்வேகத்துடன் எழுச்சி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை மத்திய அரசு மீதான குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, தம்பிதுரையும், நானும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசிக்கொள்வோம் என்றும், அன்புமணி ராமதாஸ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருவது குறித்து கேட்டதற்கு, தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் இந்த கேள்விக்கு பதில் அளிக்க வேண்டியதில்லை என்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார்.
பொதுக்கூட்டம் நடைபெற உள்ள திடலில் இன்று(புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேடை அமைப்பதற்கான கால்கோள் விழா நடக்கிறது. இதில் பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொள்கிறார்.