கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் சி.ஐ.டி.யு. ஆதரவு


கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் சி.ஐ.டி.யு. ஆதரவு
x
தினத்தந்தி 30 Jan 2019 4:30 AM IST (Updated: 30 Jan 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 22-ந்தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். தினமும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என பல போராட்டங்களை நடத்தினார்கள். இதனால் அரசு அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடின. பெரும்பாலான அரசு பள்ளிகள் மூடப்பட்டன.

திருச்சி மாவட்டத்தில் சாலை மறியல் செய்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களில் முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இதில் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று பல ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இதனால், அரசு பள்ளிகள் பெரும்பாலும் திறக்கப்பட்டன. இதனால் அரசு பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின.

ஆனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு பகுதியினர் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வளன்அரசு, நீலகண்டன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

கூட்டமைப்பு நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். அப்போது தமிழக அரசு, சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண முன்வரவேண்டும். அதனை விடுத்து போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்க கூடாது என்றனர்.

ஜாக்டோ-ஜியோவுக்கு ஆதரவாக திருச்சியில் சி.ஐ.டி.யு. சார்பில் பழைய திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் ராஜேந்திரன், ராமர், செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story