மேம்பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு: நாகர்கோவிலில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்


மேம்பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு: நாகர்கோவிலில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2019 4:30 AM IST (Updated: 30 Jan 2019 8:25 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் மேம்பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை குமரி மாவட்டக்கிளை சார்பில் நேற்று நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

சில்லரை வணிகம் மற்றும் சுயதொழில்கள், மக்கள் நலன் ஆகியவை காக்கப்பட வேண்டும், நான்கு வழிச்சாலை மற்றும் புறவழிச்சாலைகள் இருந்தும் நாகர்கோவில் நகரில் செட்டிகுளம் சந்திப்பு–கோட்டார், வடசேரி– ஒழுகினசேரி, தக்கலை ஆகிய பகுதிகளில் அபாயகரமான இரும்பு பாலம் அமைக்கக்கூடாது, ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும், நச்சு ஆலையான ஸ்டெர்லைட்டுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

உரிமை முழக்கமாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பேரவை மாவட்ட தலைவர் டேவிட்சன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணராஜா வரவேற்றார். நிர்வாகிகள் ராஜதுரை, அருள்ராஜ், ஜெபராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். இதில் வணிகர்கள் மனோகரன், கத்பட், காசிம், சிவதாணு, ராஜாமணி, சிதம்பரம், தியாகராஜன், பத்மநாபன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முடிவில் பேரவை மாவட்ட பொருளாளர் ஜேம்ஸ் மார்‌ஷல் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பலர் பேரவை கொடிகளை கைகளில் பிடித்திருந்தனர்.

Next Story