தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள் ஈரோட்டில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு


தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள் ஈரோட்டில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 31 Jan 2019 5:00 AM IST (Updated: 31 Jan 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள் என்று ஈரோட்டில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பாக பேசினார்.

ஈரோடு,

தி.மு.க. முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்–அமைச்சருமான கருணாநிதி சிலை ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. வீதியில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரிகள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதி வெண்கல உருவச்சிலையை திறந்து வைத்தார். அவர் ரிமோட் பொத்தானை அழுத்தியதும், சிலையை மூடி இருந்த மஞ்சள் நிற திரைச்சீலை உயர்ந்து கருணாநிதியின் சிலை மக்கள் பார்வைக்கு தெரிந்தது. அப்போது கூடி இருந்த தி.மு.க. தொண்டர்கள் கலைஞர் புகழ் ஓங்குக என்று கோ‌ஷம் எழுப்பினார்கள். சிலை முழுமையாக திறக்கப்பட்டதும், ஏற்கனவே பொருத்தி இருந்த ஒரு குழாயில் இருந்து ரோஜா பூக்கள் மழைபோல் சிலையில் சொரிந்தன. அதைத்தொடர்ந்து சிலையின் முன்பு ஒரு மைக் வைக்கப்பட்டது. அப்போது முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதி, ஏற்கனவே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து பேசிய பேச்சு ஒலிபரப்பப்பட்டது. கூட்டத்தில் கருணாநிதியே வந்து பேசுவதுபோல அமைக்கப்பட்டு இருந்ததால் மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள், தொண்டர்கள் உணர்ச்சிப்பெருக்குடன் அதை கேட்டு உற்சாகமாக கைகளை தட்டி ஆர்ப்பரித்தனர்.

அதைத்தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஈரோட்டில் இந்த சிலையை அமைக்க துணை புரிந்த அனைவரையும் தனித்தனியாக பெயர் சொல்லி நன்றி கூற நேரம் போதாது. எனவே மாவட்ட செயலாளர் முத்துசாமியை பாராட்டினால் அது உங்கள் அனைவரையும் பாராட்டியதுபோன்று அமையும் என்றும் நம்புகிறேன். ஈரோடு மண்டல மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்திய அவருக்கு புதிய மணிமகுடமாக இந்த சிலை அமைப்பு பணி அமைந்து உள்ளது. தலைவர் கலைஞரே நேரில் வந்து நிற்பதுபோன்ற வகையில் மிகவும் சிறப்பாக இந்த சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக அவரை பாராட்டுகிறேன். நன்றியும் தெரிவிக்கிறேன்.

ஈரோட்டில் திரு.வி.க. வீதியில் இந்த சிலை அமைந்து இருக்கிறது. அது மிகவும் பொருத்தமானதாக அமைந்து உள்ளது. திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார் என்றால், அதன் தாய் நான் என்று திரு.வி.க. கூறுவார். 1948–ம் ஆண்டு நடந்த திராவிட நாடு மாநாட்டில் திராவிடநாடு மாநாட்டு படத்தை வெளியிட்டவர் திரு.வி.க., அந்த மாநாட்டில்தான் கலைஞர் நடித்த தூக்குமேடை நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. 70 ஆண்டுகளுக்கு பிறகு, கலைஞரின் உருவச்சிலை, தலைவரின் குருகுலமான ஈரோட்டில் திறக்கப்பட்டு இருக்கிறது.

நான் தலைவராக பொறுப்பு ஏற்றபோது ஒன்றை குறிப்பிட்டு கூறினேன். நீங்கள் எல்லாம் தலைவரை இழந்து இருக்கிறீர்கள். நான் தந்தையையும் இழந்து இருக்கிறேன். ஒரு தந்தையின் சிலையை இன்னொரு தலைவரோ, தொண்டர்களோ திறந்து வைப்பது என்பது வியப்புக்கு உரியதோ, புதியதோ இல்லை. ஆனால், தந்தையின் சிலையை மகன் திறப்பது என்பது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படிப்பட்ட வரலாற்று பதிவினை எனக்கு கொடுத்து இருக்கிறீர்கள். இந்த தகுதியையும் உருவாக்கித்தந்தவர் என் தலைவர் கலைஞர்தான். என்னை பெற்று வளர்த்தது மட்டுமின்றி, லட்சக்கணக்கான தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளும் தலைவராக உயர்த்தியவரும் அவர்தான்.

இன்று நான் கலைஞரின் சிலையை திறக்கும்போதும், அவரது சிலைக்கு மலர்கள் மழையாக விழுந்தபோதும் என்னையே மறந்து எங்கோ பறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். உணர்ச்சி மிகுதியால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கிறேன். கலைஞர் உயிர்பெற்று வந்து நம்முடன் இருக்கிறாரோ? என்ற உணர்வை பெற்றேன்.

கடந்த ஆகஸ்டு 7–ந் தேதி கலைஞர் நம்மை விட்டு பிரிந்தார். அவர் மறைந்த 4 மாதத்தில் அதாவது டிசம்பர் 16–ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில், அண்ணாவின் சிலையின் அருகில் கலைஞருக்கு சிலை அமைத்தோம். அதற்கு பின்னர் சிலை அமைக்க தேர்வு செய்த ஊர் ஈரோடுதான். பாராட்டி போற்றிய பழமை எல்லாம் ஈரோட்டு பூகம்பத்தால் இடியுது பார் என்று கலைஞர் கவிதை பாடிய தந்தை பெரியார் பிறந்த மண்ணில், அதைவிட, கலைஞரை சமூக போராளியாக உருவாக்கிய ஊராகிய ஈரோட்டில் 2–வதாக சிலை திறக்கப்பட்டு இருக்கிறது. பெற்றோர் பள்ளிக்கு சென்று படி படி என்றார்கள். ஆனால் நான் ஈரோட்டில் தந்தை பெரியாரின் பள்ளிக்கூடத்தில் படித்தவன் என்று தந்தை பெரியாரின் சிலையை தர்மபுரியில் திறந்து வைத்தபோது கலைஞர் பேசினார்.

கருணாநிதியின் அடுத்த சிலை அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்திலும், கல்லக்குடி போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட திருச்சியில் அடுத்த சிலையும், திரையுலக வாழ்வின்போது தங்கி இருந்த சேலத்தில் அடுத்த சிலையும், அடுத்து நெல்லையில் பாளையங்கோட்டை, கோவை என்று அனைத்து மாவட்டங்களிலும் சிலைகள் வைக்கப்படும்.

தற்போது நமக்கு ஒரு போர் காத்து இருக்கிறது. அது பாராளுமன்ற தேர்தல். பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேதி அறிவிக்கப்பட உள்ளது. பாராளுமன்ற தேர்தல் மட்டுமா? தலைவர் கலைஞரின் தொகுதி உள்பட 21 தொகுதிகளின் தேர்தலும் வர இருக்கிறது. தமிழக மக்களை பொறுத்தவரை தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வரவேண்டும் என்ற நிலையில்தான் காத்து இருக்கிறார்கள்.

எந்த தேர்தல் வந்தாலும். இதோ கலைஞர் சிலையை திறந்து வைத்து அவரது சிலைக்கு முன்பு நின்று கொண்டு கூறுகிறேன். திராவிட முன்னேற்றக்கழகம் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியை பெறும்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றி இருக்கிறாரா?. ஈரோட்டில் மஞ்சள் உற்பத்தியாளர்களின் வாழ்க்கை பிரகாசிக்கும் என்றார். அவருடைய வாழ்க்கை மட்டும்தான் பிரகாசிக்கிறது. சேலத்தில் இரும்பு ஆலையில் உற்பத்தி பெருக்கப்படும் என்றார் நடந்ததா?. திருப்பூரில் ஜவுளி தொழில் உயர்த்தப்படும் என்றார் நடந்ததா? ராமநாதபுரத்தில் மீனவர்களை காக்க, சிங்கள ராணுவம் உள்ளே வரவிடாமல் தடுக்கப்படும் என்றார் நடந்ததா?. கன்னியாகுமரி முழுமையாக சுற்றுலா தலமாக்கப்படும் என்றார் நடந்ததா?. மொத்தத்தில் கடந்த 4¾ ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை.

எனவே மத்தியில் இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது. அதுபோல் ஊழல் நிறைந்த, கொள்ளையடிக்கும், கொலைகார ஆட்சி தமிழகத்தில் நீடிக்கக்கூடாது.

தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது என்ன தகவல் சொன்னார்கள். ரூ.1 கோடிக்கு இட்லி சாப்பிட்டார் என்றார்கள். ஜூஸ் குடித்தார் என்றார்கள். ஆனால் என்ன நடந்தது?. அந்த அம்மையாரால் அடையாளம் காட்டப்பட்டு, இன்றும் அவரால் பதவியை பெற்று இருக்கும் எடப்பாடியும், பதவி போனதும் ஆவியுடன் பேசுகிறேன், உண்மையை கொண்டு வர விசாரணை கமி‌ஷன் அமைக்க வேண்டும் என்று கூறி துணை முதல்–அமைச்சர் பதவி கிடைத்ததும் அமைதியாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வமும் இப்போது ஏன் பேசவில்லை. மறைந்த ஜெயலலிதாவுக்கு ஒரு இரங்கல் கூட்டமோ, புகழ் அஞ்சலி கூட்டமோ நடத்தி இருப்பார்களா?. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதையும் அவர்கள்தான் கூறினார்கள்.

தமிழக அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருக்கும் சி.வி.சண்முகம் இதுபற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்கிறார். ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இறந்தது முதல்–அமைச்சர். அவரது மரணம் மர்மமாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும். ஆணையம் அமைத்து உண்மையை வெளிக்கொண்டு வருவது மட்டுமல்ல, ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள். இது உறுதி. சத்தியம்.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது 5 கொலை வழக்குகள் உள்ளன. கோடநாடு காவலாளி கொலை. அந்த கொலையை மறைக்க 4 கொலைகள் என 5 கொலைகள் நடந்து உள்ளன. இதுவரை ஊழல் வழக்குகள் முதல்–அமைச்சர்கள் மீது கூறப்பட்டு உள்ளன. அதற்கு ஜெயலலிதாவே முன்உதாரணம். பல மாநில முதல்–அமைச்சர்கள், அமைச்சர்களும் ஜெயிலுக்கு சென்று இருக்கிறார்கள். ஆனால் கொலை புகார் ஒரு முதல்–அமைச்சர் மீது கூறப்படுகிறது. அவர் தமிழக முதல்–அமைச்சர். அவருக்கு அதுபற்றி அவமானம் இருக்கிறதோ இல்லையோ, தமிழ்நாட்டுக்கு மிக அவமானமாகும்.

எனவே இந்த தமிழக அரசுக்கும், இதற்கு முட்டுக்கொடுக்கும் பாசிச பா.ஜனதா அரசுக்கும் முடிவுகட்டி பாடம் கற்பிக்க வேண்டும் என்று உறுதி ஏற்போம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஈரோட்டில் திறக்கப்பட்டு உள்ள வெண்கலச்சிலை 750 கிலோ எடை, 8½ அடி உயரம் கொண்டதாகும். சிலை திறப்பு விழாவையொட்டி கருணாநிதி சிலையுடன் கூடிய சிறப்பு தபால்தலையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தபால் தலைகள் ஈரோடு தபால்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிலை அமைப்புக்காக உண்டியல் பணம் 1,104 ரூபாய் 50 காசு கொடுத்த 8 வயது சிறுமி சோபியாவை மு.க.ஸ்டாலின் அருகில் அழைத்து பாராட்டினார். மேடையில் 2 குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார். மாவட்ட தி.மு.க. சார்பில் தேர்தல் நிதியாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. சிலை வடிவமைத்த சிற்பி தீனதயாளனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

விழாவில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story