தியாகதுருகத்தில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி - டிரைவருக்கு வலைவீச்சு
தியாகதுருகத்தில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கண்டாச்சிமங்கலம்,
புதுச்சேரி மாநிலம் கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் ரவிக்குமார் (வயது 35). இவர் விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தில் தங்கியிருந்து, அங்குள்ள ஒரு தியேட்டரில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று ரவிக்குமார் தியேட்டரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் கடைவீதிக்கு சென்றார்.
அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து செங்கற்கள் ஏற்றிக்கொண்டு தியாகதுருகத்துக்கு வந்த டிராக்டர், ரவிக்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய ரவிக்குமார், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்த தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான ரவிக்குமார் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரவிக்குமாரின் தம்பி செல்வராஜ்(24) தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் கள்ளக்குறிச்சி அருகே மோ.வன்னஞ்சூரை சேர்ந்த வேலு(26) என்பவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story