குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,000 கனஅடி தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
மேட்டூர்,
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூலை மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீரின் அளவு பாசன தேவைக்கு ஏற்ப அதிகரித்தோ அல்லது குறைத்தோ திறக்கப்பட்டு வந்தது.
இந்த மாதம் முதல் வாரத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு கடந்த சில வாரங்களாக பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது கடந்த 28-ந் தேதி மாலையுடன் அடியோடு நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் மேட்டூர் அணையை குடிநீர் ஆதாரமாக கொண்ட மாவட்டங்களில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் நேற்று முதல் திறக்கப்பட்டது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 243 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 132 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 70.79 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
Related Tags :
Next Story