சிறையில் அடைக்கப்பட்ட 86 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாமீன்
கூடலூரில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட 86 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
கூடலூர்,
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் (ஜாக்டோ-ஜியோ) கடந்த மாதம் 22-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தினமும் சாலை மறியலில் ஈடுபட்டனர். கூடலூர் பகுதியில் கடந்த 25, 28, 29-ந் தேதிகளில் 86 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
பின்னர் நேற்று முன்தினம் மாலையில் முதல்- அமைச்சர் கேட்டு கொண்டதால் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ- ஜியோ மாநில நிர்வாகிகள் கூட்டாக அறிவித்தனர். இதனால் கூடலூர் பகுதியில் நேற்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது பணிக்கு சென்றனர். இதனால் 9 நாட்களுக்கு பிறகு அரசு பள்ளிக்கூடங்களுக்கு அனைத்து ஆசிரியர்களும் வந்து இருந்தனர். மேலும் அரசின் பல்வேறு துறை அலுவலகங்களிலும் அலுவலர்கள், பணியாளர்கள் பணிக்கு திரும்பினர்.
இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே கூடலூர் பகுதியில் கைதாகி கோவை மத்திய சிறையில் உள்ள 86 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என கூடலூர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் மணிகண்டன், கருணாநிதி, சாக்கோ மனு தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் 86 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது. இது குறித்து வக்கீல் மணிகண்டன் கூறும்போது, 86 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஜாமீனில் விடுவிக்க கூடலூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் இன்று அல்லது நாளை அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளது, என்றார்.
Related Tags :
Next Story