மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினீயருக்கு வாழ்நாள் சிறை
மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினீயருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு பற்றிய விவரம் வருமாறு:-
கடலூர்,
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ரெட்டியூரை சேர்ந்தவர் சித்திரைவேல் மகன் தினேஷ்பாபு (வயது 23), என்ஜினீயர். கடந்த 20-10-2016 அன்று அப்பகுதியில் உள்ள வாய்க்காலுக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற மனவளர்ச்சி குன்றிய 25 வயதுடைய இளம்பெண்ணை, தினேஷ்பாபு பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த இளம்பெண்ணுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டது. இதுபற்றி அப்பெண்ணின் தாய் விசாரித்த போது, தினேஷ்பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சைகை மூலம் தெரிவித்தார்.
இது பற்றி இளம்பெண்ணின் தாய் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தினேஷ் பாபுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
தற்போது இவ்வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி லிங்கேஸ்வரன், குற்றவாளி தினேஷ்பாபுவுக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
அவர் தனது தீர்ப்பில், கிராமப்புறங்களில் படித்தவர்களுக்கு மரியாதை உள்ளது, இதுபோன்ற குற்ற சம்பவங்கள் அதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது. மனவளர்ச்சி குன்றியவர்களை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். ஆனால் படித்த ஒருவர் மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது மிகப்பெரிய பாவச்செயலாகும். எனவே இதற்கு அதிகபட்ச தண்டனையாக வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு இழப்பீடு வழங்கவும் இலவச சட்ட உதவி மையத்துக்கு நீதிபதி லிங்கேஸ்வரன் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் க.செல்வ ப்ரியா ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story