திருப்பூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 48 பவுன் நகை, பணம் திருட்டு போலீசார் விசாரணை


திருப்பூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 48 பவுன் நகை, பணம் திருட்டு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 2 Feb 2019 4:15 AM IST (Updated: 2 Feb 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 48 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்,

திருப்பூர் காங்கேயம் ரோடு பொன்னம்மாள் லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் நடராஜ்(வயது 58). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த 29–ந்தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தஞ்சாவூரில் உள்ள ஒரு கோவில் விழாவுக்கு சென்றுள்ளார். விழா முடித்து விட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அவர் வீட்டில் வந்து பார்த்த போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடராஜன் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தது. மேலும், அதில் வைக்கப்பட்டிருந்த தங்க செயின், மோதிரம், கம்மல், வளையல் என 48 பவுன் நகைகளையும், ரூ.81 ஆயிரத்தையும் காணவில்லை. இதுகுறித்து உடனடியாக திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின்படி அங்கு விரைந்து வந்த போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்களையும் வரவழைத்து தடையங்களை சேகரித்தனர்.

விசாரணையில், நடராஜனுக்கு நன்கு தெரிந்த நபர்கள் யாரோ, அவர் வீட்டை விட்டு வெளியேறிய சமயத்தை பார்த்து வைத்து விட்டு, வீட்டின் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து நகைகள், பணத்தை திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து, அதில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களின் உருவம் பதிந்திருக்கிறதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க, திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் தனிப்படையும் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 48 பவுன் நகைகள் மற்றும் ரூ.81 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story