லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி பணியிடை நீக்கம்
லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி அருகே உள்ள பிரம்மகுண்டம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 33), விவசாயி. இவருடைய தந்தை ஜெயராமனின் பெயரில் இருந்த விவசாய மின் இணைப்பை தனது பெயருக்கு மாற்றக்கோரி அன்பழகன், கடந்த சில நாட்களுக்கு முன்பு வடபொன்பரப்பியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த இளமின் பொறியாளர் மணிகண்டன் (32) என்பவரை அணுகினார்.
அப்போது ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால்தான் மின் இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்து தர முடியும் என்று மணிகண்டன் கறாராக கூறினார். இதனால் அன்பழகன் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்தை நேற்று முன்தினம் மணிகண்டனிடம் அன்பழகன் கொடுத்தார். அந்த லஞ்ச பணத்தை வாங்கியபோது மணிகண்டனை, லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இளமின் பொறியாளர் மணிகண்டனை துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து நேற்று கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அருட்பெருஞ்ஜோதி உத்தரவிட்டார்.