திருப்பூர் வெள்ளியங்காடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் பணியிட மாற்றத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் மாணவிகள் கதறி அழுததால் பரபரப்பு


திருப்பூர் வெள்ளியங்காடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் பணியிட மாற்றத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் மாணவிகள் கதறி அழுததால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Feb 2019 11:00 PM GMT (Updated: 4 Feb 2019 9:13 PM GMT)

திருப்பூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவிகள் கதறி அழுததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

ஜாக்டோ–ஜியோ சார்பில் கடந்த மாதம் 22–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதனால் ஆசிரியர்கள் இல்லாததால் பல பள்ளிகள் மூடப்பட்டன. பல பள்ளிகள் பகுதிநேர ஆசிரியர்களை கொண்டு திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன. இந்த நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அரசு பலமுறை கோரிக்கை விடுத்தது. அதைத்தொடர்ந்து 99 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினார்கள். பணிக்கு திரும்பாத ஆசிரியர்களுக்கு கடந்த 29–ந்தேதி இரவு 7 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.

அதற்குள் பணிக்கு திரும்பாத ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றக்கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதே போல் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதான ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்யவும் உத்தரவிடப்பட்டது, அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் 24 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 22 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. ஆனால் பணியிட மாறுதல் உத்தரவை ஆசிரியர்கள் யாரும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அந்த உத்தரவு கடிதங்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கையில் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் திருப்பூர் வெள்ளியங்காடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த கணித பட்டதாரி ஆசிரியர் சுரேசை

பெரிச்சிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி உத்தரவிட்டு இருந்தார். இதையறிந்த பள்ளி மாணவ–மாணவிகள், பெற்றோர் மற்றும் பொது மக்கள் பள்ளி முன்பு திரண்டு நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியர் சுரேசை வேறு பள்ளிக்கு மாற்றக்கூடாது. தொடர்ந்து இதே பள்ளியில் பணியாற்ற ஆணை வழங்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். அப்போது மாணவ–மாணவிகள் கதறி அழுததால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது

இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு வட்டார கல்வி அதிகாரி ராமச்சந்திரன் பள்ளிக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, ஆசிரியர் மாறுதல் அரசின் உத்தரவுபடியே வழங்கப்பட்டுள்ளது. இதில் நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது. அரசு மறு உத்தரவு வழங்கினால் ஆசிரியர் இதே பள்ளியில் பணியாற்ற எந்த தடையும் இல்லை என்றார். இதை தொடர்ந்து மாணவ–மாணவிகள் வகுப்புகளுக்கு சென்றனர். பெற்றோர் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் அவர்கள் தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுத்தனர்.

பள்ளிக்கு வந்திருந்த ஆசிரியர் சுரேசை சுற்றி நின்று கொண்ட மாணவிகள் இந்த பள்ளியை விட்டு செல்லக்கூடாது என்று மாணவ–மாணவிகள் கதறி அழுதனர். அப்போது மாணவிகள் சிலர் கூறும்போது, ஆசிரியர் கடந்த 15 ஆண்டுகளாக இந்த பள்ளியில் பணியாற்றி வருகிறார். மிகவும் நல்ல ஆசிரியர். எங்களுக்கு புரியும்படி மிகவும் நன்றாக பாடங்களை நடத்துவார். அவரை மீண்டும் இதே பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். அது வரை 8–ம் வகப்பு மாணவிகளாகிய நாங்கள் யாரும் சாப்பிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளோம் என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.


Next Story