ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களை சிறைக்கு அனுப்புவோம்: தி.மு.க. ஆட்சி அமைந்ததும் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி மதுரை ஊராட்சிசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களை சிறைக்கு அனுப்புவோம் என்றும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம் எனவும் மதுரையில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மதுரை,
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில் கலந்து கொண்டு பேசிய ஏ£ளமான பெண்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குடிநீர் பிரச்சினை, சாலை வசதி, தெரு விளக்கு போன்ற குறைகள் தொடர்பாக வலியுறுத்தினர். சிலர் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும், முத்ரா வங்கி திட்டத்தின் கீழ் கடன் கேட்டால் தருவதில்லை என்றும் புகார் செய்தனர். அவர்களின் குறைகளை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின், ‘‘விரைவில் உங்களது பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும்‘‘ என்றார். முன்னதாக கூட்டத்தில் ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:–
இங்கு பெண்கள் எழுச்சியாக வந்திருக்கிறீர்கள். பொதுவாக பெண்கள் இருக்கும் இடம் கலகலப்பாகவும், சலசலப்பாகவும் சில நேரத்தில் கைகலப்பாகவும் இருக்கும். ஆனால் இங்கு நீங்கள் மிகவும் அமைதியாக இருக்கிறீர்கள்.
கோவிலுக்கு வரும் பக்தர் எப்படி மிகவும் பரவசமாக இருப்பாரோ, அது போல நானும் ஒரு கோவிலுக்கு வந்ததை போல் பரவசமாக இருக்கிறேன். ஏனென்றால் கிராமங்கள் தான் கோவில் என்று காந்தி கூறியுள்ளார். கிராமத்தில் இருந்து தான் அரசியல் பிறக்கிறது. தி.மு.க. ஏன் ஊராட்சி சபை கூட்டம் நடத்துகிறது? என்று பலரும் கேட்கின்றனர்.
தி.மு.க. ஆட்சியின் போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் இருந்தனர். கிராம சபை கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது. ஆனால் தற்போது உள்ளாட்சி தேர்தலை இந்த அரசு நடத்தவில்லை. மக்களும் தங்களது குறைகளை சொல்ல வழியில்லாமல் தவித்தனர். எனவே தான் மக்களின் குறைகளை நேரிடையாக கேட்க ஊராட்சி சபை கூட்டம் தி.மு.க. சார்பில் நடத்தப்படுகிறது.
நரேந்திரமோடி பொய்யான வாக்குறுதிகளை எல்லாம் கொடுத்து ஆட்சிக்கு வந்தார். அதே போல் சசிகலாவை ஏமாற்றி எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருக்கிறார். அவர்கள் இருவரும் மக்களை ஏமாற்றுகிறார்கள். இவர்களை ஆட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என்று மக்கள் எண்ணுகின்றனர்.
பிரதமர் மோடி, மத்திய பட்ஜெட்டில் சில ஏமாற்று அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். பின்னர் அவர் இது வெறும் டிரெய்லர் தான் என்று கூறுகிறார். ஒரு படம் திரையிடுவதற்கு முன்புதான் டிரெய்லர் வெளியிடுவார்கள். ஆனால் மோடி, 5 ஆண்டுகளுக்கு பிறகு தான் டிரெய்லரையே வெளியிட்டு இருக்கிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் பேசிய மோடி, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதால் எந்த பலனும் இல்லை என்கிறார். ஆனால் பணக்காரர்கள் வாங்கிய பல லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்கிறார். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். அதே போல் ஏற்கனவே அறிவித்தது போல் கல்வி கடனும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாய பொருட்களான உரம் மற்றும் பூச்சி மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. வரியை விவசாயிகளிடம் இருந்து வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் தருவேன் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி இரும்பு பெண்மணியாக இருக்கிறார். ஆனால் அவருக்கு பிரதமர் மோடி பல்வேறு நெருக்கடிகளை கொடுக்கிறார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்னும் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பல நலத்திட்ட பணிகளை செய்ய வேண்டி உள்ளது. அதோடு ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை சிறைக்கு அனுப்புவதே முதல் பணி. எங்களுக்கும், ஜெயலலிதாவிற்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகள் வேறாக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு முதல்–அமைச்சர்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அத்துடன் இங்கு காலியாக 21 சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடக்கும். ஆனால் பொதுமக்களின் எண்ணம், ஓட்டு மொத்த சட்டசபைக்கு தேர்தல் நடைபெற வேண்டும் என்பது தான். இந்த கூட்டத்தில் நீங்கள் கூறிய குறைகள் அனைத்தும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இல்லையென்றால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உங்களது குறைகள் களையப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் கூத்தியார்குண்டில் நடைபெற்றது. ஒரு வாக்குச்சாவடிக்கு 20 முகவர்கள் வீதம் மொத்தம் 5,900 பேர் பங்கேற்றனர் கூட்டத்திற்கு மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. செ.ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு குறிப்பிட்ட பெயரை சொல்லி முகவர்களின் வருகையை ஆய்வு செய்து கணக்கிட்டார். பின்னர் அவர் பேசியதாவது;–
ஊராட்சி சபை கூட்டத்தில் மக்கள் கூடுவதை கண்டு எதிர்க்கட்சியினர் பொறாமைபடுகிறார்கள், ஆத்திரப்படுகிறார்கள். தமிழகத்தில் இன்று அடிமை ஆட்சி, பினாமி ஆட்சி நடக்கிறது. அதை அகற்ற வேண்டும் என்று நாம் சொல்லவில்லை. உடனடியாக அடிமை ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்று மக்கள் தயாராகிவிட்டனர். அதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. அ.தி.மு.க. ஆட்சியை அகற்றும் விதத்தில் அ.தி.மு.க.வினரே செயல்பட்டு வருகிறார்கள்.
மக்களுக்காக கருணாநிதி செய்யாத சாதனையே இல்லை. அவர் போல சாதனை செய்ய இன்னொருவர் பிறந்து கூட வர முடியாது. அவர் இறந்ததும் அவருக்கு நினைவு இல்லம் அமைக்க பேரறிஞர் அண்ணாவின் நினைவு இடத்திற்கு அருகில் இடம் கேட்டோம். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கையைப்பிடித்து கேட்டோம். தமிழகத்தில் 5 முறை முதல்–அமைச்சராக இருந்தார் என்பதற்காக அல்ல. தமிழுக்காக, தமிழ் மொழிக்காக, தமிழக மக்களுக்காக தொண்டாற்றியதற்காக கேட்டோம். ஆனால் அவர்கள் இடம் அளிக்கவில்லை. தலைவர் தன் வாழ்வில் எதற்கும் ஆசைப்பட்டது இல்லை. எதையும் விரும்பியதும் இல்லை. அண்ணா நினைவு இல்லம் அருகே அண்ணாவின் தம்பியான தனக்கு ஒரு இடம் வேணடும் என்று ஆசைப்பட்டார். விரும்பினார். நீதிமன்றம் சென்றோம். நீதி வென்றது.
அவரது சிலை திறப்பு விழா அழைப்பிதழில் ராகுல் காந்தியின் பெயர் போடவில்லை. விளம்பரப்படுத்தவில்லை. ஆனால் ராகுல் காந்தி விழாவில் பங்கேற்று தலைவரின் சேவைக்கு புகழ் சேர்த்தார். கருணாநிதியின் நினைவு இடத்த்தில் தினம், தினம் மலர் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆளும் கட்சியாக அ.தி.மு.க. இருந்து வந்த போதிலும் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் கூட்டம் கூட நடத்தவில்லை
இவ்வாறு அவர் பேசினார்.
ஊராட்சி சபை கூட்டத்தில் பேசிய பெண்கள் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தினர். ஒரு பெண் பேசும் போது, ‘‘எங்களுக்கு இலவசம் எல்லாம் வேண்டாம். மதுக்கடைகளை மூட வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தததும் நீங்கள் மதுக்கடைகளை மூடுவீர்களா?‘‘ என்று கேட்டார். தொடர்ந்து அவர், ‘‘இந்த கேள்விக்கு, இப்போதே நீங்கள் பதில் சொல்ல வேண்டும்‘‘ என்றார். அதற்கு ஸ்டாலின், ‘‘பதில் சொல்லாவிட்டால், விட மாட்டீர்கள் போல் இருக்கே‘‘ என்று நகைச்சுவையுடன் கூறினார்.
மற்றொரு பெண் பேசும் போது, ‘‘தயவு செய்து மதுக்கடைகளை மூடுங்கள். பள்ளி மாணவர்கள் கூட மதுகுடிக்கும் நிலை இங்கு வந்து விட்டது. எனவே தி.மு.க. ஆட்சி வந்ததும் மதுக்கடைகளை மூடுவீர்களா?‘‘ என்று என்றார்.
இதே போல் பெரும்பாலான பெண்கள் சொந்த வீடு வேண்டும், முதியோர் உதவித்தொகையை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கி தவிர பொதுத்துறை வங்கி வழங்கிய விவசாய கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேசினர். ஒரு பெண் பேசும் போது, ‘‘விவசாயத்தை காக்க, ‘விவசாயிகள் நன்றாக வாழ வேண்டும். எனவே, அவர்களுக்கும் மாத சம்பளமும், பென்ஷன் தொகையும் கிடைக்க வேண்டும்‘‘ என்றார். அப்போது அங்கிருந்த பெண்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் நேற்று இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார். அதில் ஒரு குழந்தைக்கு ‘‘வெற்றிச் செல்வன்’’ என்றும் மற்றொரு குழந்தைக்கு ‘‘அன்புச் செல்வன்’’ என்றும் பெயரிட்டார்.