கடம்பூர் அருகே விவசாயி வெட்டிக்கொலை: மருமகளின் கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது


கடம்பூர் அருகே விவசாயி வெட்டிக்கொலை: மருமகளின் கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 Feb 2019 10:00 PM GMT (Updated: 5 Feb 2019 1:17 PM GMT)

கடம்பூர் அருகே விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மருமகளின் கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கயத்தாறு,

கடம்பூர் அருகே விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மருமகளின் கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், விவசாயியை தீர்த்து கட்டியதாக அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

விவசாயி வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே மேலபாறைப்பட்டி கீழ தெருவைச் சேர்ந்தவர் அண்ணாத்துரை (வயது 55), விவசாயி. இவருடைய மனைவி ஆனந்தம்மாள். இவர்களுக்கு ஹரி கிருஷ்ணன் (31) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஹரி கிருஷ்ணன் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். எனவே, அண்ணாத்துரை, ஆனந்தம்மாள் ஆகிய 2 பேரும் தங்களது வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அண்ணாத்துரை தனது வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த மர்மநபர்கள் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

3 பேர் கைது

இந்த விசாரணையில், அண்ணாத்துரையை கொலை செய்தது, பக்கத்து ஊரான மும்மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் முத்து மாரியப்பன் (33), அவருடைய உறவினர்களான பாலசுப்பிரமணியன் என்ற சேகர் (35), கருப்பசாமி (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான முத்து மாரியப்பன் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:–

கள்ளக்காதல்

நானும், ஹரி கிருஷ்ணனும் நண்பர்கள். நாங்கள் ஒன்றாக கட்டிட வேலைக்கு சென்று வந்தோம். ஹரி கிருஷ்ணனுக்கு பிரேமா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். எனக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஹரிகிருஷ்ணன் வேலைக்காக வெளிநாடு சென்றார்.

பின்னர் எனக்கும், பிரேமாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. நான் அடிக்கடி ஹரி கிருஷ்ணனின் வீட்டுக்கு சென்று, பிரேமாவிடம் பழகி வந்தேன். நாங்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம்.

இடையூறு

இதனை அறிந்த ஹரிகிருஷ்ணனின் தந்தை அண்ணாத்துரை எங்களை கண்டித்தார். ஆனாலும் நான் அதனை பொருட்படுத்தவில்லை. மேலும் எங்களுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த அண்ணாத்துரையை மிரட்டினேன். இதுகுறித்து அண்ணாத்துரை அளித்த புகாரின்பேரில், கடம்பூர் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு கோவில்பட்டி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, அண்ணாத்துரை எங்களுடைய கள்ளக்காதலை பிரிக்கும் வகையில், பிரேமாவை நெல்லையில் உள்ள அவருடைய பெற்றோரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

மனைவி பணம் தர மறுப்பு

இந்த நிலையில் கோர்ட்டில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு செல்வதற்காக, என்னுடைய மனைவியிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டேன். ஆனால் அவர் பணம் தர மறுத்து அவதூறாக பேசினார். எனவே, ஆத்திரத்தில் நான் அண்ணாத்துரையை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

இதுகுறித்து என்னுடைய உறவினர்களான பாலசுப்பிரமணியன், கருப்பசாமி ஆகிய 2 பேரிடமும் தெரிவித்தேன். அவர்களும் எனக்கு உதவி செய்வதாக கூறினர். நாங்கள் 3 பேரும் சேர்ந்து, அண்ணாத்துரையின் வீட்டுக்குள் புகுந்து, அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சிறையில் அடைப்பு

கைதான முத்து மாரியப்பன், பாலசுப்பிரமணியன், கருப்பசாமி ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கோவில்பட்டி 2–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.


Next Story