சனீஸ்வரன் கோவில் கும்பாபிசேகம்: காரைக்கால் மாவட்டத்துக்கு 11–ந்தேதி உள்ளூர் விடுமுறை நாராயணசாமி அறிவிப்பு
திருநள்ளார் சனீஸ்வரன் கோவில் கும்பாபிசேகத்தையொட்டி காரைக்கால் மாவட்டத்துக்கு வருகிற 11–ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் (சனீஸ்வரன் கோவில்) கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிசேகம் வருகிற 11–ந்தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கும்பாபிசேக விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதையொட்டி காரைக்கால் மாவட்டத்துக்கு வருகிற 11–ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்–அமைச்சர் நாராயணசாமியின் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீசனீஸ்வர பகவான் ஸ்தலமான ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா 14 வருடங்களுக்கு பிறகு வருகிற 11–ந்தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி காரைக்கால் மாவட்டத்துக்கு வருகிற 11–ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க முதல்– அமைச்சர் நாராயணசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.