நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி கும்பகோணத்தில், சீமான் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி கும்பகோணத்தில், சீமான் பேட்டி
x
தினத்தந்தி 6 Feb 2019 11:15 PM GMT (Updated: 6 Feb 2019 6:45 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடப்போவதாக கும்பகோணத்தில் சீமான் கூறினார்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு தவறான அணுகு முறையை பின்பற்றுகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.), நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்திலும் மத்திய அரசு பெரும் தோல்வியை சந்தித்தது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டதாக பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா, ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம்ராஜன் ஆகியோர் கூறி உள்ளனர். இதற்கு மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

மத்திய அரசு தற்போது தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் உள்ள சலுகைகளை கடந்த 4 ஆண்டுகளாக ஏன் தாக்கல் செய்யவில்லை? விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் தருவதாக கூறி உள்ளனர். இந்த அறிவிப்பு எப்போது செயலாக்கம் பெறும்? மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைப்பதாக கூறி உள்ளனர். அதை எப்போது அமைப்பார்கள்? அந்த துறைக்கு அமைச்சர் யார்? இந்த அறிவிப்புகள் அடுத்த தேர்தலில் பா.ஜனதா வென்றால்தான் செயல் வடிவம் பெறும்.

சரக்கு மற்றும் சேவை வரி மூலம் கிடைக்கிற பெரிய தொகையினால் மக்களுக்கு என்ன செய்தார்கள்? என்றே தெரியவில்லை. இந்த கேள்விக்கு இதுவரை பதில் அளிக்கவில்லை.

ராணுவ தளவாடங்கள் தயாரிப்புக்கு மத்திய அரசு ஒரு தனியார் முதலாளியிடம் ஒப்பந்தம் கொடுத்துள்ளது. அந்த முதலாளி திவால் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். தனியார் முதலாளிகள் வாங்கிய ரூ.3 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால் மாணவர்களின் கல்வி கடன் ரூ.65 ஆயிரம் கோடி தான் உள்ளது. அதை தள்ளுபடி செய்ய மறுக்கிறார்கள். மத்திய அரசு, முதலாளிகளின் முகவர்போல செயல்படுகிறது. மக்களுக்கான நலன் பேணுகிற அரசாக இல்லை.

மத்திய அரசு, மாநில அரசின் உரிமைகள் அனைத்தையும் பறித்து விட்டது. தமிழகத்தில் முதல்-அமைச்சர் என்பவர் பெயரளவுக்கு மட்டுமே உள்ளார். மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை போன்ற துணிவும், தெளிவும் நமது மாநில முதல்-அமைச்சருக்கு இல்லையே என்ற வருத்தம் தான் உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது உறுதி. 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும், 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும் நிறுத்த உள்ளோம்.

மணியரசனின் தலைமையில் இயங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் எங்களுக்கு ஆதரவு தருகின்றனர். மற்றவர்களின் ஆதரவு நாம் தமிழர் கட்சிக்கு எப்போதும் உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கட்சியின் மாநில செயலாளர் வக்கீல் ஆனந்த், தொகுதி செயலாளர் ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story