கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல நாட்டுப்படகுகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா? மீனவர்கள் எதிர்பார்ப்பு
கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல இந்த ஆண்டு நாட்டுப்படகு மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்று மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ராமேசுவரம்,
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கச்சத்தீவு அமைந்துள்ளது. இலங்கைக்கு சொந்தமான இந்த தீவில் புனித அந்தோணியார் கோவில் உள்ளது. ஓட்டு கொட்டகையில் இருந்து வந்த இந்த கோவிலின் அருகில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசால் புதிய கோவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழா வருகிற மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழ் யாழ்ப்பாணம் மறை மாவட்டம் மூலம் சிவகங்கை மறை மாவட்ட ஆயருக்கும், வேர்க்கோடு புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தைக்கும் வந்துள்ளது. அதைத்தொடர்ந்து வேர்க்கோடு பங்குத்தந்தை தேவசகாயம் தலைமையில் திருவிழாவுக்கு செல்வது தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
65–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500–க்கும் அதிகமானோர் திருவிழாவுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி திருவிழாவில் கலந்து கொள்பவர்களிடம் படகு உரிமையாளர்கள் மூலம் விண்ணப்ப படிவங்களும் வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 10–ந்தேதிக்குள் இந்த படிவத்தை பூர்த்தி செய்து படகு உரிமையாளர்களிடம் அளிக்க வேண்டும் என விழா குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப்படகுகளில் செல்ல அரசு அனுமதிக்க அளிக்கப்பட வில்லை. இந்த ஆண்டாவது கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப்படகுகளில் மீனவர்கள் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும் என பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மேலும் நாட்டுப்படகுகளில் செல்ல விரும்புபவர்களும் பெயர் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் இதுவரையிலும் அதிகாரப்பூர்வமாக அரசோ, மாவட்ட நிர்வாகமோ நாட்டுப்படகுகளில் செல்வது குறித்து எவ்வித அறிவிப்பும் செய்யவில்லை.
இதுகுறித்து நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் ராயப்பன் கூறும்போது, “கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு நாட்டுப்படகு மீனவர்கள் செல்வது பாரம்பரியமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக திருவிழாவுக்கு நாட்டுப்படகுகளில் செல்ல அரசும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளிக்கவில்லை. இந்த ஆண்டாவது வழக்கம் போல நாட்டுப்படகுகளில் சென்று வர அரசு அனுமதி அளிக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.