ஐகோர்ட்டு உத்தரவுப்படி நகராட்சி கடை வாடகை உயர்வை நடப்பு நிதி ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டும் வியாபாரிகள் வலியுறுத்தல்


ஐகோர்ட்டு உத்தரவுப்படி நகராட்சி கடை வாடகை உயர்வை நடப்பு நிதி ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டும் வியாபாரிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Feb 2019 4:15 AM IST (Updated: 7 Feb 2019 3:46 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு உத்தரவுப்படி நகராட்சி கடை வாடகை உயர்வை நடப்பு நிதி ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகத் தினருக்கு, நகராட்சி கடை வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி நிர்வாகத்தினரும் நகராட்சி கடைகளின் வாடகையை உயர்த்தி உள்ளனர். இந்த வாடகை உயர்வு வழிக்காட்டி மதிப்பு அடிப்படையிலோ, பொதுப்பணித்துறை மதிப்பீட்டு அடிப்படையிலோ செய்யப்படாமல் சந்தை மதிப்பீட்டை விட கூடுதலாக உயர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நகராட்சி கடை வியாபாரிகளுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2016–2017 நிதியாண்டு முதல் வாடகை உயர்வினை வழங்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

ஏற்கனவே கடந்த 2016–2017 நிதியாண்டிற்கு பழைய வாடகை தொகையினை செலுத்திவிட்ட வியாபாரிகள் வாடகை உயர்வை மறுபரிசீலனை செய்யும்படி நகராட்சி நிர்வாகத்துக்கு மனு கொடுத்தனர். இந்த நிலையில் விருதுநகர் நகராட்சி கடை வியாபாரிகள் சிலர் வாடகை உயர்வுக்கு ஆட்சேபணை தெரிவித்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

மதுரை ஐகோர்ட்டு வாடகை உயர்வில் 50 சதவீத தொகையினை செலுத்தும்படியும், செலுத்திய பின்னர் வாடகை உயர்வினை மறுபரிசீலனை செய்யுமாறு நகராட்சி நிர்வாகத்துக்கு மனு கொடுக்குமாறும், நகராட்சி நிர்வாகம் சட்டப்படி அதனை மறுபரிசீலனை செய்யுமாறும் உத்தரவிட்டது.

இதன் பின்னரும் நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே செய்த வாடகை உயர்வின்படி 2016–2017, 2017–2018 மற்றும் 2018–2019 ஆகிய நிதியாண்டுகளுக்கும் செலுத்த வேண்டும் என நகராட்சிகடை வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு ஆட்சேபணை தெரிவித்து மீண்டும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு 50 சதவீத வாடகை உயர்வு தெகையினை மட்டும் செலுத்துமாறு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்தநிலையில் கடலூர் நகராட்சி கடை வியாபாரிகள், சென்னை ஐகோர்ட்டில் வாடகை உயர்வு பிரச்சினை தொடர்பாக தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த கோர்ட்டு வாடகை உயர்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் நகராட்சி நிர்வாகத்தினர் முன்தேதி முதல் வாடகை உயர்வினை வசூலிக்க வேண்டும் என குறிப்பிடாத நிலையில் நகராட்சி நிர்வாகம் கடந்த 2016–ம் ஆண்டு முதல் வாடகை உயர்வினை வசூலிக்க கூடாது என்றும், நடப்பு 2018–2019 நிதியாண்டு முதலே வாடகை உயர்வு தொகையினை வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

எனவே நகராட்சி வியாபாரிகள் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளப்படி வாடகை உயர்வினை நடப்பு நிதியாண்டு முதல் அமுல்படுத்த கோரி உள்ளதுடன் வாடகை உயர்வு தொகையினை பொருத்தமட்டில் அதே ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுப்படி செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.


Next Story