கல்லூரி மாணவர் வெட்டப்பட்ட வழக்கு: மேலும் 2 மாணவர்கள் கைது
கல்லூரி வளாகத்திற்குள் மாணவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் மேலும் 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை,
சிவகங்கையை அடுத்த பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அஜீத்ராஜ் (வயது 19). இவர் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி. 2–ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவரை கடந்த 5–ந்தேதி கல்லூரி வளாகத்திற்குள் வைத்து, அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மகாதேவன், சதீஸ் மற்றும் ராஜாமணி ஆகிய 3 பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டினர். அதில் அஜீத்ராஜ் பலத்தகாயம் அடைந்த நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி மகாதேவன், சதீஸ் மற்றும் ராஜாமணி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாணவர் ராஜாமணி (20) கைது செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து தொடர்ந்து தலைமறைவாக இருந்த மகாதேவன் (21) சதீஸ் (20) ஆகிய 2 மாணவர்களையும் சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் அழகர், சப்–இன்ஸ்பெக்டர் சக்திவேல், ஏட்டுக்கள் பெத்தணன், அய்யனார், உடையனன், மருது, ராஜசேகரன் ஆகியோர் நேற்று கைது செய்தனர்.