ஓதுவார்களின் கோரிக்கைகளை 2 வாரத்தில் நிறைவேற்ற வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ஓதுவார்களின் கோரிக்கைகளை 2 வாரத்தில் நிறைவேற்ற வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 Feb 2019 4:07 AM IST (Updated: 9 Feb 2019 4:07 AM IST)
t-max-icont-min-icon

‘‘ஓதுவார்களின் கோரிக்கைகளை 2 வாரத்தில் நிறைவேற்ற வேண்டும்’’ என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

மதுரை ஐகோர்ட்டு கிளையில், நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்த சிங்காரவேலன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

ஓதுவார் குடும்பத்தை சேர்ந்த நான் இலஞ்சி குமாரர் கோவிலில் ஓதுவாராக பணியாற்றி வருகிறேன். திராவிட வேதங்களான தேவாரம் மற்றும் திருவாசகத்தை கோவிலில் பாடி வருகிறேன். கோவில்களில் ஓதுவார்களாக பணியாற்றுவோரின் சம்பளத்தை வரைமுறைப்படுத்தி கடந்த 2004–ம் ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணை கடந்த 1997 முதல் முன்தேதியிட்டு அமலானது. ஆனாலும் எனக்கு குறைவான சம்பளமே வழங்கப்பட்டது. இதனால், அரசாணைப்படி சம்பளத்தை உயர்த்துமாறு கோரிக்கை வைத்தேன். பின்னர், கடந்த 2010–ல் ரூ.9,900 ஆக சம்பளம் உயர்த்தப்பட்டது. ஆனால், அரசாணைப்படியான சம்பள உயர்வு வழங்கவில்லை.

பல கோவில்களில் பணியாற்றும் ஓதுவார்கள் அரசாணைப்படி அதிக சம்பளம் வாங்குகின்றனர். ஆனால், எனக்கு குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. என்னைப் போன்ற ஓதுவார்களால்தான் தேவாரம், திருவாசகம் உள்ளிட்டவை பாடப்படுகிறது. இதன்மூலம் தமிழ் கலாசாரமும், பாரம்பரியமும் பாதுகாக்கப்படுகிறது. அரசாணைப்படி சம்பளத்தை கணக்கிட்டால் எனக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகை ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும். இது தொடர்பான என் கோரிக்கையை இந்து அறநிலையத்துறை ஆணையர் நிராகரித்துள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து, அரசாணைப்படி எனக்கு சம்பளம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

முந்தைய விசாரணையின் போது நீதிபதி மகாதேவன், “ ஓதுவார்களின் கோரிக்கையை பரிசீலித்து அரசு ஊழியர்களை போல ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் கால தாமதமின்றி அவற்றை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்படாதாததை தொடர்ந்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை மனுதாரர் தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரருக்கு அனைத்து பணப்பலன்களும் முழுமையாக வழங்கப்பட்டுவிட்டது என அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி, ஓதுவார்களின் கோரிக்கையை பரிசீலித்து அரசு ஊழியர்களைப் போல ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். பொதுநல உத்தரவாக பிறப்பித்த நிலையில் மனுதாரருக்கு மட்டும் அரசு பலன்கள் கிடைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. ஓதுவார்கள் விவகாரத்தில் அரசு தூங்குகிறது. இந்த வி‌ஷயத்தில் அரசுக்கு ஏற்கனவே எச்சரிக்கை மணி கொடுக்கப்பட்டுவிட்டது. ஓதுவார்களின் பழமையான பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும். எனவே ஓதுவார்களின் கோரிக்கை தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை 2 வாரத்தில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை எனில் தமிழக இந்துசமய அறநிலையத் துறை முதன்மை செயலாளர், ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிடக் கூடும் என கூறிய நீதிபதி வழக்கினை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.


Next Story