மாவட்ட செய்திகள்

2–வது நாளாக இயக்கப்பட இருந்த நீராவி என்ஜின் ரெயிலில் பயணம் செய்ய ஆள் இல்லாததால் திடீர் ரத்து + "||" + The steam engine was canceled due to the absence of a train to run the steam engine

2–வது நாளாக இயக்கப்பட இருந்த நீராவி என்ஜின் ரெயிலில் பயணம் செய்ய ஆள் இல்லாததால் திடீர் ரத்து

2–வது நாளாக இயக்கப்பட இருந்த நீராவி என்ஜின் ரெயிலில் பயணம் செய்ய ஆள் இல்லாததால் திடீர் ரத்து
நாகர்கோவில்– கன்னியாகுமரி இடையே 2–வது நாளாக இயக்கப்பட இருந்த நீராவி என்ஜின் ரெயிலில் பயணம் செய்ய ஆள் இல்லாததால் திடீரென ரத்து செய்யப்பட்டது. ரெயில்வே அதிகாரிகள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததே இதற்கு காரணம் என்று பயணிகள் சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
நாகர்கோவில்,

மத்திய ரெயில்வே துறை சார்பில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மிகவும் பழமை வாய்ந்த நீராவி என்ஜினுடன் கூடிய ‘ஹெரிடேஜ் ரெயில்’ என்ற பாரம்பரிய ரெயில் பயணத்தை செயல்படுத்தி வருகிறது. 1855–ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் 1919 வரை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பழமையும், பாரம்பரியமும் மிக்க நீராவி என்ஜின் ரெயிலில் பயணிக்க இந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமைகிறது. 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி என்ஜின் முன்பு மீட்டர்கேஜ் ரெயில் பாதையில் இயக்கப்பட்டது. தற்போது அதனை சீரமைத்து அகல ரெயில் பாதையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


நீராவி என்ஜின் ரெயிலை பற்றி அறிந்திருந்திராத தற்கால தலைமுறையினர் அதனை அறிந்து கொள்வதற்கும், அதில் பயணித்த அனுபவத்தை பெற்றுக்கொள்வதற்கும் வசதியாக மத்திய அரசு இந்த பாரம்பரிய ரெயில் பயணத்தை நாடு முழுவதும் ரெயில்வே கோட்டங்கள் வாரியாக ஏற்பாடு செய்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு கோட்டங்களில் இந்த பயணம் நடைபெற்றுள்ளது.

அதேபோல் கடந்த 7–ந் தேதி திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட நாகர்கோவில்–கன்னியாகுமரி இடையே பாரம்பரிய ரெயில் பயணச்சேவை நடைபெற்றது. இந்த ரெயிலில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு வெளிநாட்டினராக இருந்தால் ரூ.1,500–ம், உள்நாட்டினராக இருந்தால் ரூ.750–ம், சிறுவர்களுக்கு ரூ.500–ம் கட்டணமாக ரெயில்வே அதிகாரிகள் நிர்ணயம் செய்திருந்தனர்.

முதல் நாள் ரெயில் பயணத்தின்போது வெளிநாட்டைச் சேர்ந்த 20 பேர் மட்டுமே பயணம் செய்தனர்.

2–வது நாளாக சனிக்கிழமையும் (நேற்று), 3–வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் (இன்று) ஆகிய இரண்டு நாட்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி நேற்று காலை 10.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு நீராவி என்ஜின் ரெயிலை இயக்க அதிகாரிகள் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். காலை 6 மணிக்கு என்ஜினில் நிலக்கரி நிரப்பப்பட்டு, எரியூட்டப்பட்டு தயார் நிலையில் இருந்தது.

ஆனால் இந்த பயணத்துக்கு ஒன்றிரண்டு பயணிகள்  மட்டுமே முன்பதிவு செய்திருந்தனர். நேரடியாக நேற்று யாரும் பயணம் செய்ய வரவில்லை. இதனால் இந்த ரெயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே ரெயில்வே அதிகாரிகள் நேற்றைய பயணத்தை திடீரென ரத்து செய்தனர். இதனால் முன்பதிவு செய்திருந்த பயணிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.

3–வது நாளான இன்று இந்த ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் இதுவரையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகள் போதிய அளவில் முன்பதிவு செய்யவில்லை எனக்கூறப்படுகிறது. எனவே இன்றும் இந்த ரெயில் இயங்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. நாளை(திங்கட்கிழமை) இந்த ரெயில் கேரள மாநில கொச்சிக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.

பாரம்பரியத்தையும், பழமையையும் கட்டிக்காப்பதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். அப்படிப்பட்ட இந்த மாநிலத்தில் இந்த பாரம்பரிய ரெயில் பயணம் நடைபெற்ற அனைத்து பகுதிகளிலுமே பயணிகளிடம் மிகுந்த வரவேற்பு இருந்தது. ஆனால் குமரி மாவட்டத்தில் உள்ளூர் பயணிகளிடம் மிகுந்த ஆர்வம் இல்லாமல் போனதற்கு திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கம்போல தமிழகத்தில் உள்ள குமரி மாவட்டத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்க்கும் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டம் இந்த வி‌ஷயத்திலும் அதே மனநிலையோடு செயல்பட்டதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

பாரம்பரியமான இந்த ரெயில் பயணத் திட்டம் குறித்து குமரி மாவட்ட மக்கள் மற்றும் இம்மாவட்டத்துக்கு வந்து செல்லும் வெளிநாட்டு பயணிகளிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாததும், விளம்பரப்படுத்தாததுதான் காரணம் என்றும், மேலும் இந்த ரெயிலில் பயணம் செய்ய பயணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் மிகவும் அதிகம் என்பதும் மற்றொரு காரணம் என்றும் ரெயில் பயணிகள் கூறுகிறார்கள்.

இதுதொடர்பாக குமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது:–

திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் எப்போதுமே குமரி மாவட்டத்தை புறக்கணித்து வருகிறார்கள். இந்த மாவட்டம் தமிழகத்தில் இருப்பதாலோ என்னவோ அதிகாரிகளின் செயல்பாடு இவ்வாறு உள்ளது. அதேபோல்தான் பாரம்பரிய ரெயில் சேவையிலும் அதிகாரிகளின் செயல்பாடு உள்ளது. இதுபற்றிய விழிப்புணர்வோ, விளம்பரமோ குமரி மாவட்ட ரெயில் பயணிகளிடம் எதுவும் மேற்கொள்ளவில்லை. மேலும் கட்டணம்  வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.1,500–ம், உள்நாட்டு பயணிகளுக்கு ரூ.750–ம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது அளவுக்கு அதிகமானது ஆகும். இதேபோன்ற காரணங்களால்தான் பாரம்பரிய ரெயிலில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இருந்தாலும் முதல்நாள் பாரம்பரிய ரெயில் சேவை தொடக்க நிகழ்ச்சியின்போது நான் உள்பட பலர் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேளச்சேரி-சென்னை கடற்கரை: இருமார்க்கத்திலும் மதியம் 2.10 மணி வரை ரெயில்கள் ரத்து
வேளச்சேரி-சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் ரெயில்கள் மதியம் 2.10 மணி வரை இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகின்றன.
2. ராபர்ட் வதேராவின் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கப்பிரிவு டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல்
ராபர்ட் வதேராவின் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனுவினை, அமலாக்கப்பிரிவு டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.
3. அமிதாப் பச்சனுக்கு திடீர் உடல் நலக்குறைவு
நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
4. திருவாரூரில் இருந்து புதுக்கோட்டைக்கு அரவைக்காக 910 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது
திருவாரூரில் இருந்து புதுக்கோட்டைக்கு அரவைக்காக 910 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
5. நீட் தேர்வை நிச்சயம் காங்கிரஸ் ரத்து செய்யும்; குஷ்பு பேட்டி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை நிச்சயம் ரத்து செய்யும் என குஷ்பு தெரிவித்துள்ளார்.