கீரனூர் அருகே இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் கைது


கீரனூர் அருகே இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் கைது
x
தினத்தந்தி 10 Feb 2019 4:45 AM IST (Updated: 10 Feb 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

கீரனூர் அருகே இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்ட அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீராச்சாமி (வயது 70). தொழில் அதிபர். இவரது மகன் முத்து (30). இவர்களுக்கும் களமாவூர் சத்திரத்தை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்திக்கும் (52) பணம் கொடுங்கல்-வாங்கல் தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 6-ந் தேதி கிருஷ்ணமூர்த்தியின் தோட்டத்திற்கு வீராச்சாமி, அவரது மகன் முத்து மற்றும் உறவினர்கள் 4 பேர் வந்து, பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அரிவாள், கம்பு ஆகியவற்றுடன் தயாராக இருந்த கிருஷ்ணமூர்த்தி தரப்பினர் வீராச்சாமி, முத்து மற்றும் உறவினர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் வீராச்சாமி மற்றும் அவரது மகன் முத்து ஆகிய 2 பேரையும் அரிவாளால் வெட்டியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இந்த இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பாக 15 பேர் மீது கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்தவர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதில் ஏற்கனவே நல்லூர், சீத்தப்பட்டியை சேர்ந்த வினோத், சிக்கல்குமார், செல்வகுமார் உள்பட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தியை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையை முடித்துவிட்டு, 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 9 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story