பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க., பெரியாரிய அமைப்புகள் கருப்புகொடி போராட்டம் திருப்பூரில் இன்று நடக்கிறது


பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க., பெரியாரிய அமைப்புகள் கருப்புகொடி போராட்டம் திருப்பூரில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 9 Feb 2019 11:15 PM GMT (Updated: 9 Feb 2019 10:21 PM GMT)

பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க., பெரியாரிய அமைப்புகள் சார்பில் கருப்புகொடி போராட்டம் இன்று திருப்பூரில் நடக்கிறது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருப்பூர்,

பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3 மணிக்கு திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரில் நடக்கும் அரசு விழா மற்றும் பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கருப்பு கொடி போராட்டம் திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பு இன்று காலை 11 மணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கட்சியின் மாநில அவைத்தலைவர் துரைசாமி மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்றே திருப்பூருக்கு வந்த வைகோ இங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கினார். பின்னர் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள இடத்தை கட்சி நிர்வாகிகளுடன் பார்வையிட்டார். மேலும், நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை செய்தார்.

இதுபோல் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புகொடி போராட்டம் இன்று மதியம் 1 மணிக்கு திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20–க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்று சேர்ந்து கருப்புகொடி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இரு போராட்டங்களுக்கும் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் தடையை மீறி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க இந்து முன்னணி சார்பில் பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பு இன்று காலை முதல் மாலை வரை தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்க உள்ளதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். இதன்காரணமாக நேற்று இரவு முதல் திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பு போலீசார் பலத்த பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.


Next Story