திருக்குவளை பஸ் நிலையத்தில் பராமரிப்பின்றி காணப்படும் கழிவறை சீரமைக்கப்படுமா? பயணிகள் கோரிக்கை
திருக்குவளை பஸ் நிலையத்தில் பராமரிப்பின்றி காணப்படும் கழிவறையை சீரமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளாங்கண்ணி,
வேளாங்கண்ணி அருகே திருக்குவளை கடைத்தெரு அருகே அரசு மேல்நிலைப்பள்ளி, பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த பள்ளி மற்றும் கல்லூரியில் திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று பல்வேறு சான்றுகள் பெறவும் திருவக்குவளைக்கு வந்து செல்கின்றனர். வெளியூர்களில் இருந்து பஸ்களில் வரும் பயணிகள் திருக்குவளை கடைத்தெருவில் உள்ள பஸ் நிலையத்தில் இறங்கி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தனர். அதேபோல் திருக்குவளையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த பஸ் நிலையத்தில் பஸ் ஏறுவது வழக்கம். இந்த பஸ் நிலையத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் சென்று வருகின்றன.
சீரமைக்க கோரிக்கை
இந்த நிலையில் பஸ் நிலையம் அருகே பயணிகளின் வசதிக்காக கழிவறை கட்டிடம் அமைக்கப்பட்டது. இந்த கட்டிடம் தற்போது எவ்வித பராமரிப்பின்றி குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் குழாய்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலம் கழிவறைகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது குழாய்கள் உடைந்து காட்சியளிக்கிறது. இதனால் பயணிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிப்பின்றி காணப்படும் கழிவறையை சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story