தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திட்டங்களால் விவசாயம் முற்றிலும் அழியும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேச்சு
தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திட்டங்களால் விவசாயம் முற்றிலும் அழியும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.
மொடக்குறிச்சி,
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே முத்தாயிபாளையத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் கொங்குராஜாமணி, துணைத்தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களால் விவசாயம் முற்றிலும் அழியும் நிலையில் உள்ளது. எதிர்காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களால் இந்தியா முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இந்தியர்கள் அகதிகளாக உருவாகும் நிலை ஏற்பட உள்ளது.
கூடங்குளம் அணுஉலை, ஹைட்ரோ கார்பன் திட்டம், கர்நாடகாவில் காவிரியில் அணை கட்டும் திட்டம், கேரளாவில் அணை கட்டும் திட்டம் என்று பல்வேறு திட்டங்களால் தமிழ்நாடு பாலைவனமாக மாறப்போகிறது. எதிர்காலத்தில் குடிக்க தண்ணீர் இன்றி தவிக்கப்போகிறோம்.
இதைத்தவிர கொங்கு மண்டலத்தில் உயர்மின்கோபுரம் அமைக்கும் பணியால் இருக்கும் கொஞ்ச விவசாயத்தையும் அழிக்கப் பார்க்கிறார்கள். பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் 1,200 கிலோவாட் மின்சாரத்தை கடலுக்கு அடியிலும், பூமிக்கு அடியிலும் கொண்டு செல்ல திட்டமிட்டு உள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் விவசாயிகளின் விளைநிலங்களின் வழியாக கொண்டு செல்ல ஆணையிட்டு, எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். பெண்கள் என்றும் பாராமல் குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் வீசுகின்றனர். ஜனநாயக நாட்டில் இதுபோன்ற கொடுமைகள் நடப்பது விசித்திரமாக உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு சாதி–மதம், கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்று திரண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக போராட வேண்டும். விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு வைகோ பேசினார்.
இதேபோல் சென்னிமலை அருகே முதலியாக்கவுண்டன்வலசு பகுதியில் நடந்த விவசாயிகள் கூட்டத்திலும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசினார். இதில், தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர் கி.வே.பொன்னையன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.பொன்னுசாமி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் முனுசாமி, கவின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பவானி அருகே ஜம்பை பேரூராட்சிக்கு உள்பட்ட கருக்குப்பாளையம், மயிலம்பாடி ஊராட்சி பகுதியில் உள்ள 1,000–க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த பகுதிகளை நேற்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார்.
அப்போது அவருடன், உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் கூட்டு இயக்கத்தின் தலைவர் ராஜாமணி, பவானி ஒன்றிய ம.தி.மு.க. பொறுப்பாளர் அறிவழகன் மற்றும் 100–க்கும் மேற்பட்ட விவசாயிகள் இருந்தனர்.
பின்னர் வைகோ, உயர் மின் கோபுரங்கள் அமைத்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வீடு, வீடாகச் சென்று அவர்களை சந்தித்து பேசினார்.