100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்


100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Feb 2019 10:45 PM GMT (Updated: 13 Feb 2019 10:43 PM GMT)

உசிலம்பட்டி அருகே 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அல்லிகுண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என்று கூறி பலமுறை ஊராட்சி ஒன்றியம் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். கடந்த குடியரசு தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்திலும் அவர்கள் மனு கொடுத்தனர். ஆனால் அந்த மனுக்கள் மீதான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து ஆணையாளரிடம் கேட்டபோது, அப்படி ஒரு மனு எனக்கு வரவே இல்லை என்று பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் தங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி அல்லிகுண்டம், பெருமாள்கோவில்பட்டி பஸ் நிறுத்த பகுதியில் உள்ள உசிலம்பட்டி–பேரையூர் சாலையில் மறியல் செய்தனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் காட்டுராஜா, அல்லிகுண்டம் கிளைத்தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாற்றுத்திறனாளிகள் கூறும்போது, குடியரசு தினத்தையொட்டி நடந்த கிராம சபை கூட்டத்திலேயே கொடுக்கப்பட்ட மனுவிற்கு பதில் இல்லை. மற்ற தினங்களில் நடைபெற கூடிய கிராம சபை கூட்டம் அனைத்தும் கண்துடைப்பாகவும், ஊராட்சி நிர்வாகிகளின் தேவைக்காகவே நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினர். இதற்கு கண்டனம் தெரிவித்தும் இந்த மறியல் நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சூரக்குமாரன், இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்குவதாக கூறியதை அடுத்து மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.


Next Story