கும்மிடிப்பூண்டி அருகே ரெயில் மோதி பிளஸ்-2 மாணவி சாவு


கும்மிடிப்பூண்டி அருகே ரெயில் மோதி பிளஸ்-2 மாணவி சாவு
x
தினத்தந்தி 14 Feb 2019 10:30 PM GMT (Updated: 14 Feb 2019 6:51 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே ரெயில் மோதி பிளஸ்-2 மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற காதலனிடம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ளது பண்பாக்கம் கிராமம். இங்கு உள்ள பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் சர்மிளா (வயது 17). இவர் கவரைப்பேட்டை அரசினர் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று மாலை கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து மாணவி சர்மிளாவும், சிற்றரசூர் கிராமத்தை சேர்ந்த 18 வயது வாலிபரும் தண்டவாளத்தில் பண்பாக்கம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கவரைப்பேட்டையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரெயில் மோதி மாணவி சர்மிளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவத்தின்போது உடன் இருந்த வாலிபரை கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தில் வைத்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், எனது உறவினர் வீடு பண்பாக்கம் கிராமத்தில் உள்ளது. அங்கு அடிக்கடி சென்று வரும்போது ஏற்பட்ட பழக்கத்தால் பள்ளி மாணவி சர்மிளாவை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தேன்.

காதலர் தினம் என்பதால் சர்மிளாவை அவரது வீட்டில் கொண்டு போய் விடுவதற்காக கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து அவருடன் பண்பாக்கத்திற்கு ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றேன். அப்போது எதிர்பாராதவிதமாக ரெயில் சென்ற வேகத்தில் உள்இழுக்கப்பட்டு சர்மிளா மீது ரெயில் மோதி அவர் இறந்ததாக வாலிபர் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் குமுதா தலைமையில் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து சர்மிளாவுடன் சென்ற அவரது காதலனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story