கரும்பு தோட்டத்தில் எலும்புக்கூடாக மீட்பு: பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்தது அம்பலம் வாலிபர் கைது


கரும்பு தோட்டத்தில் எலும்புக்கூடாக மீட்பு: பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்தது அம்பலம் வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 Feb 2019 11:15 PM GMT (Updated: 14 Feb 2019 6:59 PM GMT)

மாயமான பள்ளி மாணவி கரும்புத்தோட்டத்தில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட வழக்கில், அவரை கற்பழித்து கொலை செய்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி பள்ளிக்கு சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை. மாயமான அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கீச்சலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சுரேஷ் என்பவரது கரும்பு தோட்டத்தில் உள்ள ஓடையில் மனித எலும்புகளும், பள்ளி சீருடையும் கிடந்தது. அந்த இடத்தில் போலீசார் தோண்டி பார்த்தபோது, அங்கு மாயமான மாணவி அணிந்திருந்த கம்மல், வெள்ளி கொலுசு, ரிப்பன் ஆகியவை கிடைத்தன. எனவே மாணவியை மர்ம நபர்கள் கொலை செய்து புதைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

இதற்கிடையே சம்பவ இடத்தை காஞ்சீபுரம் டி.ஐ.ஜி. தேன்மொழி பார்வையிட்டார். மேலும் மாணவியை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீசார் சந்தேகத்தின்பேரில் கீச்சலம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் நாயுடு (வயது 61), சுரேஷ் (47), சுப்பிரமணி என்பவரது மகன் சங்கரய்யா (20), முருகையா (32) ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் சங்கரய்யா என்பவர் தான் முக்கிய குற்றவாளி என தெரியவந்தது. இதனையடுத்து மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவானி நேரில் வந்து சங்கரய்யாவிடம் விசாரணை நடத்தினார். பிறகு அவரை அழைத்து சென்று எலும்புக்கூடு கிடைத்த கீச்சலம் ஓடை கால்வாய்க்கு சென்றனர். அங்கு மாணவியை கொலை செய்தது எப்படி? என்று சங்கரய்யா நடித்து காட்டியதாக கூறப்படுகிறது.

இந்த கொலையில் மேலும் 4 பேர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் யார்? என்ற விவரத்தை சங்கரய்யாவிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவியை, சங்கரய்யா மற்றும் 4 பேர் குடோன் ஒன்றில் வைத்து கற்பழித்து பிறகு கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சங்கரய்யாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரது கூட்டாளிகள் 4 பேரையும் தேடி வருகிறார்கள்.

Next Story