நாமக்கல் அருகே தொழிலாளி கொலையில் பெண் உள்பட 4 பேர் கைது


நாமக்கல் அருகே தொழிலாளி கொலையில் பெண் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 15 Feb 2019 10:15 PM GMT (Updated: 15 Feb 2019 8:01 PM GMT)

நாமக்கல் அருகே தொழிலாளி கொலை வழக்கில் பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பரமத்தி வேலூர், 

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள லத்துவாடி கிராமம் சிலம்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பூசன் (வயது 65). கூலித்தொழிலாளி. கடந்த 11-ந் தேதி இரவு வீட்டு முன்பு கட்டிலில் படுத்து தூங்கிய இவர் வாய் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். வேலகவுண்டம்பட்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் பூசன் வீட்டில் இருந்த மொபட், டி.வி. மற்றும் அவருடைய செல்போன் ஆகியவை திருட்டு போய் இருந்ததும், திருட வந்த ஆசாமிகள் அவரை அடித்து கொலை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவுப்படி, 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தனிப்படை போலீசார் பூசனை கொலை செய்த மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று நாமக்கலில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் இளநகர் பஸ் நிறுத்தம் அருகே வேலகவுண்டம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் வாகனத்தை திருப்பிக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளனர்.

அவர்களை பிடித்து விசாரனை நடத்தியதில், அவர்கள் பூசனை கொலை செய்தவர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில், செலம்பகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பூசன் பாலியல் தொந்தரவு கொடுத்ததும், அப்பெண்ணின் உறவினர்கள் சேர்ந்து பூசனை கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த பொருட்களை திருடிச்சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அப்பெண்ணின் உறவினர்களான ஈரோட்டைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பூபதி (22), குணசேகரன் மகன் சுந்தரம் (35), செல்வராஜ் மனைவி நிர்மலா (40) மற்றும் 14 வயது நிரம்பிய சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பூசன் வீட்டிலிருந்து திருடிச்சென்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டது. கைதான 3 பேர் சேலம் மத்திய சிறையிலும், 14 வயது சிறுவன் சேலம் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.

Next Story