காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருப்பூர்,
காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரம்பிய காரை மோதியதில் துணை ராணுவ வீரர்கள் பலியானார்கள். இறந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று மாலை திருப்பூர் குமரன் சிலை முன்பு நடைபெற்றது. இந்து அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் இறந்த ராணுவ வீரர்களுக்கு விளக்கேற்றி வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இதில் ஆர்.எஸ்.எஸ். நகர தலைவர் வாசுநாதன், பா.ஜனதா வடக்கு மாவட்ட தலைவர் சின்னசாமி, திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம், இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார், லகு உத்யோக் பொறுப்பாளர் மோகனசுந்தரம், பி.எம்.எஸ். சார்பில் சந்தானம் மற்றும் தொழில் துறையினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது சிலர் பாகிஸ்தான் நாட்டின் கொடிகளை தீ வைத்து எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வடக்கு போலீசார் எரிந்த கொடிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இந்த நிலையில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வருகிற 20-ந் தேதி மாலை 4.30 மணிக்கு திருப்பூர் டவுன்ஹாலில் தொடங்கி மாநகராட்சி அலுவலகம் முன்புறம் உள்ள காந்தி சிலை வரை அஞ்சலி ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. இதில் தொழில்துறையினர், பொதுமக்கள், வணிக அமைப்பினர் கலந்து கொள்ள உள்ளனர்.
Related Tags :
Next Story