கீழடி, ஆதிச்சநல்லூர் அகழாய்வு விவகாரம்: மத்திய அரசுக்கு, நீதிபதிகள் திடீர் உத்தரவு


கீழடி, ஆதிச்சநல்லூர் அகழாய்வு விவகாரம்: மத்திய அரசுக்கு, நீதிபதிகள் திடீர் உத்தரவு
x
தினத்தந்தி 16 Feb 2019 4:30 AM IST (Updated: 16 Feb 2019 4:29 AM IST)
t-max-icont-min-icon

கீழடி, ஆதிச்சநல்லூர் அகழாய்வு விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. நிறைவேற்றவில்லை என்றால் அவமதிப்பு நடவடிக்கையை ஐகோர்ட்டு எடுக்கும் என எச்சரித்தது.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிடக்கோரி முத்தாலங்குறிச்சி காமராஜ், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் தூத்துக்குடி சிவகளை பரம்பு பகுதியிலும் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்று மற்றொரு மனு தாக்கல் செய்தார். இதுதவிர, ஆதிச்சநல்லூர் தொடர்பான வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆர்.அழகுமணி, ‘‘தொல்லியல் துறைக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்படுகிறது. அதில் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் மாநில தொல்லியல் பணிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாயை ஒதுக்குகிறார்கள். ஆனால் தமிழகத்துக்கு போதிய நிதியை ஒதுக்குவதில்லை.

ஆதிச்சநல்லூரில் கடந்த 2004–ம் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. அங்கு 114 ஏக்கர் பரப்பளவில் பழங்கால பொருட்களின் எச்சங்கள் இருந்தபோதும், இதுவரை ½ ஏக்கர் பரப்பளவில் தான் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. பொருந்தல், கொடுமணல் ஆகிய இடங்களின் ஆய்வு முடிவுகளும் என்ன ஆனது? என்று தெரியவில்லை. தமிழகத்தை மத்திய தொல்லியல்துறை புறக்கணிக்கிறது. எனவே தொடர்ச்சியாக அனைத்து பகுதிகளிலும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்“ என்று வாதாடினார்.

இதையடுத்து நீதிபதிகள், “ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி தொடர்பாக கோர்ட்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும், அதை செயல்படுத்த மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை.

அதேபோல கீழடி அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட அதிகாரியை திடீரென இடமாற்றம் செய்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது தமிழர் நாகரிகம் மிகவும் பழமையானது என்று தெரிகிறது. அதனால் தான் மத்திய அரசு இந்த வி‌ஷயத்தில் ஆர்வம் காட்டவில்லையா? தமிழர் நாகரிகம் பழமையானது என்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டால், அது நம் நாட்டுக்கே பெருமைதானே?

கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், வெளிநாடுகளில் கிடைத்து இருந்தால் அவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து, ஆர்வமுடன் செயல்பட்டு இருப்பார்கள்.

எனவே இந்த வி‌ஷயத்தில் உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஐகோர்ட்டு தாமாக முன்வந்து அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும்“ என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

இதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல், “தமிழகத்திடம் தொல்லியல் துறை எந்த பாரபட்சமும் காட்டவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கப்படும்“ என்றார்.

பின்னர் தொல்லியல் துறை சார்பில் தமிழகத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது? என்பது உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, இந்த வழக்கை வருகிற 18–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story