சேலம் கோட்டத்துக்குட்பட்ட 75 ரெயில் நிலையங்களில் ‘வை-பை’ இணையதள வசதி மேலாளர் தகவல்


சேலம் கோட்டத்துக்குட்பட்ட 75 ரெயில் நிலையங்களில் ‘வை-பை’ இணையதள வசதி மேலாளர் தகவல்
x
தினத்தந்தி 17 Feb 2019 4:30 AM IST (Updated: 17 Feb 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கோட்டத்துக் குட்பட்ட 75 ரெயில் நிலையங்களில் ‘வை-பை’ இணையதள வசதி ஏற் படுத்தப்படும் என சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ் கூறினார்.

கரூர்,

கரூர் ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் மற்றும் அதிகாரிகள் வருகை புரிந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரெயில்வே பார்சல் அலுவலகம், நடைமேடை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ரெயில்நிலையத்தில் வசதிகளை மேம்படுத்துவது குறித்து கேட்டறிந்தார். மேலும் கழிவறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவை ரெயில் நிலையத்தில் தடையின்றி கிடைக்கிறதா? ரெயில் களின் வருகை குறித்து அறிவிப்பு வெளியிடும் எலக்ட்ரானிக் பலகை சரியாக செயல்படுகிறதா? என்பன உள்ளிட்டவற்றை பார்வையிட்டு குறிப்பெடுத்து கொண்டார். இந்த ஆய்வின் போது, ரெயில் நிலைய மேலாளர் சுரேந்திரபாபு, ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் தர்மாராம் பவாரி, சப்-இன்ஸ்பெக்டர் குணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதனை தொடர்ந்து சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் ரெயில் நிலையத்தில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் பயணிகள் காத்திருப்போர் அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சேலம், கோவை உள்ளிட்ட ரெயில் நிலையங் களில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதே போல் கரூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும். தற்சமயம் சேலம் கோட்டத்தில் உள்ள 8 ரெயில் நிலையங்களில் ‘வை-பை’ இணையதள வசதி உள்ளது. இதனை சேலம் கோட்டத்திலுள்ள மற்ற 75 ரெயில்நிலையங்களுக்கும் விரிவுபடுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story