ராஜபாளையம்-செங்கோட்டை 4 வழிச்சாலையை மாற்றுப்பாதையில் அமைக்கக்கோரி வழக்கு அதிகாரிகள் பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு


ராஜபாளையம்-செங்கோட்டை 4 வழிச்சாலையை மாற்றுப்பாதையில் அமைக்கக்கோரி வழக்கு அதிகாரிகள் பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 Feb 2019 10:39 PM GMT (Updated: 16 Feb 2019 10:39 PM GMT)

ராஜபாளையம்-செங்கோட்டை இடையே அமையவுள்ள 4 வழிச்சாலையை மாற்றுப்பாதையில் அமைக்கக்கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த நமசிவாயம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

ராஜபாளையத்தில் இருந்து செங்கோட்டைக்கு 4 வழிச்சாலை அமைக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தது. இதையடுத்து அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

இந்த 4 வழிச்சாலை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.

குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள தேசிய வன விலங்கு சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சாலை அமைகிறது. அதுமட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 51 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டியே 4 வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் வனவிலங்குகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். மேலும் சுற்றுச்சூழல் விதிகளின்படி வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள பகுதிகளில் இருந்து குறைந்தபட்சம் 3 கிலோ மீட்டர் தூரத்தில்தான் 4 வழிச்சாலை அமைய வேண்டும். ஆனால் இந்த விதிமுறைகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை.

இதையடுத்து இந்த சாலையை மாற்று பாதையில் அமைக்கக்கோரி, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் மனு அனுப்பினேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் வனவிலங்கு சரணாலயம் பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து முறையான எந்த ஆய்வும் நடத்தவில்லை. அதேபோல் சாலை அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டமும் முறையாக நடத்தவில்லை.

எனவே விவசாயிகளையும், வனவிலங்கு சரணாலயத்தையும் கவனத்தில் கொண்டு, ராஜபாளையம்-செங்கோட்டை இடையிலான 4 வழிச்சாலையை மாற்று வழியில் கொண்டு செல்வதற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி யிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், மனுதாரர் கூறுவதை போல ராஜபாளையம்-செங்கோட்டை 4 வழிச்சாலையை மாற்று பாதையில் அமைப்பது பற்றி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மற்றும் மத்திய சுற்றுச் சூழல் துறை அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 1-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story