கியாஸ் சிலிண்டர் வெடித்து கணவன்-மனைவி சாவு


கியாஸ் சிலிண்டர் வெடித்து கணவன்-மனைவி சாவு
x
தினத்தந்தி 19 Feb 2019 4:45 AM IST (Updated: 18 Feb 2019 11:04 PM IST)
t-max-icont-min-icon

திருப்போரூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து கணவனும், மனைவியும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் வீடு தரைமட்டமானது.

ஆலந்தூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள கல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 78). இவரது மனைவி கஸ்தூரிபாய் (65). இவர்களுடைய ஒரே மகள் திருமணமாகி கணவருடன் விருதுநகரில் வசித்து வருகிறார்.

ஆனந்தராஜூம், அவரது மனைவியும் தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் வீட்டின் ஒரு பகுதியில் சிறிய பெட்டிக்கடை நடத்தி வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். நேற்று அதிகாலை இவர்களது வீட்டில் திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

மேலும் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரும் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் ஆனந்தராஜ், அவரது மனைவி கஸ்தூரிபாய் ஆகியோர் உடல் துண்டாகியும், கருகியும் பரிதாபமாக இறந்தனர்.

தகவல் அறிந்ததும் மறைமலைநகர், சிறுசேரி தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். இருப்பினும் கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் குடிசை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் நாசமானது.

தகவல் அறிந்த காயார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீயில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் கணவன்-மனைவி இறந்த சம்பவம் கல்வாய் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story