தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி கைது தொழில் போட்டியால் கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது அம்பலம்


தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி கைது தொழில் போட்டியால் கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது அம்பலம்
x
தினத்தந்தி 18 Feb 2019 11:00 PM GMT (Updated: 18 Feb 2019 7:30 PM GMT)

ஸ்ரீபெரும்புதூர் அருகே தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்த அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். தொழில் போட்டியால் கூலிப்படையை ஏவி கொலை செய்தது அம்பலமானது.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கத்தை சேர்ந்தவர் தி.மு.க. பிரமுகர் ரமேஷ். இவரை மர்ம நபர்கள் பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் திருச்சி கோர்ட்டில் கடந்த 12-ந் தேதி விஸ்வா என்கிற விஸ்வநாதன் (வயது 29), சுரேந்தர் (30), சத்தியா (28), செல்வகுமார் (29) ஆகியோர் இந்த கொலை தொடர்பாக சரண் அடைந்தனர். மேலும் திருவள்ளூர் கோர்ட்டில் மகேஷ், அசோக்குமார், சந்துரு, பாலசந்தர், படையப்பா ஆகியோர் சரண் அடைந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் போலீசார் முதல்கட்டமாக விஸ்வா, சுரேந்தர், சத்தியா, செல்வகுமார் ஆகிய 4 பேரை காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். விசாரணையில் தி.மு.க. பிரமுகர் ரமேஷை பிள்ளைப்பாக்கத்தை சேரந்த வெங்கடேசன் (38), இவரது தம்பி கோபு (32) ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் வெங்கடேசன் மற்றும் கோபுவை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் கூலிப்படையை ஏவி ரமேஷை கொலை செய்ததை ஒப்புகொண்டனர். இதையடுத்து போலீசார் இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

கைதான வெங்கடேசன் பிள்ளைப்பாக்கம் பகுதியில் உள்ள கம்பெனிகளில் கழிவு பொருட்களை எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

தி.மு.க. பிரமுகர் ரமேசும் இதே தொழில் செய்துள்ளார். தொழில் போட்டி காரணமாக தான் இந்த கொலை நடந்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story