கூடலூர் வனப்பகுதியில் காட்டுத்தீ
கூடலூர் வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியது.
கூடலூர்,
கூடலூர் வன கோட்டத்தில் கூடலூர், ஓவேலி, நாடுகாணி தாவரவியல் மையம், தேவாலா, பிதிர்காடு, சேரம்பாடி உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன. இங்கு அடர்ந்த வனப்பகுதி மற்றும் புல்வெளி பிரதேசங்களும் இருக்கின்றன. காட்டுயானை, சிறுத்தைப்புலி, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும் வசித்து வருகிறது. இதுதவிர ராஜநாகம் என சிறு வன உயிரினங்களின் புகலிடமாகவும் திகழ்கிறது.
இந்த நிலையில் கூடலூர் பகுதியில் வறட்சியான காலநிலை நிலவுகிறது. இதனால் வனப்பகுதியில் புற்கள் காய்ந்து வருகிறது. மேலும் நீர்நிலைகளும் வறண்டு காணப்படுகிறது. காட்டுயானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வறட்சியான காலநிலையை பயன்படுத்தி சமூக விரோதிகள் வனப்பகுதிக்கு தீ வைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வனப்பகுதி மற்றும் புல்வெளிகள் தீயில் கருகி விடுகின்றன.
வனப்பகுதிக்கு தீ வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இருப்பினும் தீ வைக்கும் சம்பவங்கள் தொடர்கிறது. கூடலூர் தாலுகா நாடுகாணி அருகே பொன்னூர் மற்றும் பொன்வயல் பகுதியில் அடர்ந்த வனப்பகுதி மற்றும் புல்வெளி பகுதிக்கு யாரோ சிலர் தீ வைத்து விட்டு தப்பினர். வறட்சியால் காய்ந்த புற்களில் தீ வேகமாக பரவியது.
இதை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தேவாலா வனச்சரகர் சரவணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அப்பகுதி பொதுமக்களின் உதவியுடன் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக அணைக்க முடியவில்லை. இதனால் பல கட்டங்களாக போராடி காட்டு தீயை வனத்துறையினர் அணைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, 10 ஏக்கர் பரப்பளவிலான புல்வெளி காட்டுத்தீயால் கருகி உள்ளது. மேலும் சிறுவன உயிரினங்கள் தீயில் சிக்கி இறந்துள்ளன. வனப்பகுதிக்கு தீ வைத்த குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story