வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலை புதிதாய் தயாரிக்கவேண்டும் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலை புதிதாய் தயாரிக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
ஈரோடு,
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
கோபிசெட்டிபாளையம் அருகே பொலவக்காளிபாளையம் பெரியார்நகரை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:–
எங்கள் பகுதியில் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அங்கு கரடு முரடான இடத்தை சுத்தம் செய்வதற்காக சிலர் வெடி வைத்து பாறைகளை தகர்த்து உள்ளனர். இதனால் சிதறிய கற்கள் அங்குள்ள வீடுகளின் மீது விழுந்ததில் மேற்கூரை ஓடுகள் சேதமடைந்து உள்ளன. மேலும் வீடுகளில் உள்ள டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களும் சேதமடைந்தன. ராமாள் என்கிற பெண் காயம் அடைந்தார். எனவே வெடி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
அந்தியூர் அருகே செட்டிபாளையத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:–
நாங்கள் அந்தியூரில் உள்ள ஒரு வங்கியில் பயிர்க்கடன் பெற்றிருந்தோம். கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியவில்லை. இதனால் கடனை திரும்ப செலுத்த சிரமமாக உள்ளது. வங்கியின் பெயரை பயன்படுத்தி சிலர் எங்களை மிரட்டுகின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடன் செலுத்தும் தவணையை 2 ஆண்டுகளுக்கு தள்ளிப்போட வேண்டும். மேலும், வட்டிக்கு வட்டி போடுவதை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் என்.ஆர்.வடிவேல் தலைமையில் அமைப்பினர் தங்களது கைகளில் கோரிக்கை விளக்க அட்டையை தாங்கியபடி வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:–
கடந்த 2003–ம் ஆண்டு மத்திய அரசின் சுவர்ண ஜெயந்தி நகர்புற வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜன திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதில் குடிசை வீட்டில் வசிப்பவர்களுக்கும், சொந்தமாக நிலம், வீடு இல்லாதவர்களுக்கும், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆனால் இது 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பட்டியலாகும். இந்த பட்டியலில் இருப்பவர்கள் பலர் அரசு வேலையில் உள்ளனர். சொந்த வீடு, நிலம் வைத்திருக்கிறார்கள். எனவே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக விண்ணப்பங்களை பெற்று ஆய்வு செய்ய வேண்டும். அதன்படி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் புதிய பட்டியலை தயார் செய்து தமிழக அரசு வழங்கும் சிறப்பு உதவித்தொகையான ரூ.2 ஆயிரம் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
அன்னை சத்யா நகர் மற்றும் ஈரோடு மாவட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–
ஈரோடு அன்னை சத்யா நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்வதை கைவிட்டு டோக்கன் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுதொடர்பாக குலுக்கல் முறையை ரத்து செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். ஆனால் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மீண்டும் குலுக்கல் முறையில்தான் வீடுகளை ஒதுக்கீடு செய்ய உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
நாங்கள் கடந்த 27 ஆண்டுகளாக அங்கு குடியிருந்து வருகிறோம். பழைய வீடுகளை இடித்து புதிய வீடுகள் கட்டி கொடுக்கும்போது எங்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. எனவே டோக்கன் வழங்கப்பட்ட அனைத்து பயனாளிக்கும் டோக்கன் முறையில் வீடுகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–
தேர்தலில் பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது சந்தேகம் ஏற்படும் வகையில் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற வெளிநாடுகளில் வாக்குச்சீட்டு முறை கையாளப்பட்டு வருகிறது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
ஈரோடு காவிரிக்கரை ராகவேந்திரசாமி கோவில் நிர்வாகி கொடுத்த மனுவில், ‘‘ராகவேந்திரசாமி, ஆஞ்சநேயர் கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான கோசாலையை காலி செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் கோவிலின் காவலாளியை மிரட்டியுள்ளார். எனவே கோசாலை உள்ள இடத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்று கூறப்பட்டு இருந்தது.
தாயகம் திரும்பியோரின் தாயக மக்கள் வாழ்வுரிமை மையம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–
நாங்கள் இலங்கையில் இருந்து வந்து ஈரோட்டில் வசிக்கிறோம். நாங்கள் இலவச வீட்டுமனை பட்டா அல்லது வீடுகள் கேட்டு கோரிக்கை விடுத்து வருகிறோம். நாங்கள் விண்ணப்பித்த 365 பேர்களில் 163 பேருக்கு சித்தோட்டில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ளவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை.
நாங்கள் தினக்கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு நிரந்தர வேலையும் இல்லை, வருமானமும் இல்லை. எனவே எங்களுக்கும் வீடுகளை ஒதுக்கி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 268 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர்.
கூட்டத்தில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.