தகுதியுடைய அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தமிழக அரசின் சிறப்பு நிதி அமைச்சர் தகவல்


தகுதியுடைய அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தமிழக அரசின் சிறப்பு நிதி அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 19 Feb 2019 11:00 PM GMT (Updated: 19 Feb 2019 6:57 PM GMT)

தகுதியுடைய அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தமிழக அரசின் சிறப்பு நிதி வழங்கப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.

கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ’தினத்தந்தி’ நிருபரின் கேள்விக்கு பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி பெறுவதில் சிரமம் உள்ளதாக கூறப்படுகிறதே? அனைவருக்கும் சிறப்பு நிதி வழங்கப்படுமா?

அமைச்சர் ஆர்.காமராஜ்:- தமிழக அரசு தொழிலாளர்கள் அனைவருக்கும் சிறப்பு நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. முதல்-அமைச்சர் அறிவித்திருந்த இந்த சிறப்பு நிதியினை பெற அனைத்து வகை தொழிலாளர்களும் தகுதியுடையவர்கள். நானும் மற்ற சில அமைச்சர்களும் நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது தொழிலாளர்களாகிய தங்களுக்கும் சிறப்பு நிதி கிடைக்குமா? என்று பொதுமக்கள் அய்யப்பாடுகளை எழுப்பினர். பொதுமக்களின் அய்யப்பாடுகளை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

இவ்வாறு முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது சிறப்பு நிதி வழங்குவதில் தொழிலாளர்கள் யாரும் விடுபட மாட்டார்கள். தகுதியுடைய அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் இந்த சிறப்பு நிதி வழங்கப்படும். இந்த பயனாளிகள் பட்டியலில் தகுதியுடைய தொழிலாளர்களின் பெயர் விடுபட்டிருந்தாலும் யாரும் கவலைப்பட வேண்டாம். தொழிலாளர்கள் யாரேனும் விடுபட்டு இருந்தால் அவர்களிடம் மீண்டும் மனுக்கள் பெறப்பட்டு விசாரணை அடிப்படையில் அவர்களுக்கும் சிறப்பு நிதி வழங்கப்படும் என முதல்-அமைச்சர், எங்களிடம் உறுதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, இன்னும் ஓரிரு தினங்களில் இந்த சிறப்புநிதி வழங்கும் திட்டத்தினை தமிழக முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story