காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் குடிநீர் வழங்க கோரிக்கை


காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் குடிநீர் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 20 Feb 2019 4:00 AM IST (Updated: 20 Feb 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

ராயமுண்டான்பட்டியில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை அருகே உள்ள ராயமுண்டான்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். குடிநீர் வழங்கக்கோரியும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கக்கோரியும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்தனர்.

இந்த நிலையில் பூதலூர் தாசில்தார் சிவகுமார், போராட்டம் அறிவித்த கிராம மக்கள் மற்றும் கட்சியினரை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதி அளித்தார்.

அதன்படி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று ராயமுண்டான்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டமும் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பூதலூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வியாகுலதாஸ், மருதமுத்து, ராஜாங்கம், விஜயகுமார் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

குடிநீர் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுபற்றி தகவல் அறிந்த பூதலூர் தாசில்தார் சிவகுமார், வட்டார வளர்ச்சி அதிகாரி கணேசன், செங்கிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால்சோழன் மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் அடையாள அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என்றும், குடிநீர் வினியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் கிராம நிர்வாக அலுவலக முற்றுகை போராட்டம் மற்றும் சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story