காந்திநகரில் புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


காந்திநகரில் புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 Feb 2019 4:30 AM IST (Updated: 20 Feb 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை காந்தி நகரில் புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி கஜா புயல் தாக்கியது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. இதேபோல குடிசைகள், ஓட்டு வீடுகள் போன்றவையும் சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில், புயல் நிவாரண பொருட்களும், தென்னை, வாழை மரங்கள் சாய்ந்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், விவசாயம், வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது வங்கி கணக்கில் நிவாரண தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை காந்திநகர் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்டு உள்ள வீடுகளை கணக்கெடுத்து சென்ற அதிகாரிகள், உங்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என கூறி சென்றனர். ஆனால் இதுநாள் வரை காந்திநகரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புயல் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகை வழங்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகை வழங்காததை கண்டித்து, காந்திநகரில் புதுக்கோட்டை-ஆலங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்ரகுமான் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

Next Story