கரூர் ரெயில் நிலையம்-சேலம் புறவழிச்சாலையை இணைக்கும் வகையில் ரூ.21 கோடியே 12 லட்சத்தில் அம்மா சாலை அமைக்கும் பணி தொடக்கம்


கரூர் ரெயில் நிலையம்-சேலம் புறவழிச்சாலையை இணைக்கும் வகையில் ரூ.21 கோடியே 12 லட்சத்தில் அம்மா சாலை அமைக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 20 Feb 2019 4:30 AM IST (Updated: 20 Feb 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம் புறவழிச்சாலையை இணைக்கும் வகையில் ரூ.21 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் அம்மா சாலை அமைக்கும் பணியின் தொடக்க நிகழ்ச்சியில் தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் ஜவுளி ஏற்றுமதி, கொசுவலை, பஸ் பாடி கட்டுதல் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் இருப்பதால் தினமும் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கிறது. இதனால், வெங்கமேடு ரெயில்வே மேம்பாலம், திண்ணப்பா கார்னர், கோவை ரோடு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள், ஜவுளி வர்த்தகர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து கரூர் ரெயில் நிலையத்தையும், சேலம் புறவழிச்சாலையையும் இணைக்கும் வகையில் புதிதாக சாலை அமைக்க போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழிகாட்டுதலின்பேரில், நகராட்சி மூலம் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை அமைக்க ரூ.21 கோடியே 12 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அந்த சாலைக்கு அம்மாசாலை என பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி பெரியகுளத்துபாளையம் பகுதியில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். பின்னர், சாலை பணிக்கான பூமி பூஜையை நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கரூர் மாவட்ட மக்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் 50 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று தற்போது இணைப்புச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்திற்கு அடுத்து ரூ.6 ஆயிரம் கோடி வரை அன்னிய செலாவணியை ஈட்டிக் கொண்டிருக்கும் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கும், பிற தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் இந்த சாலை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். 40 அடி அகலத்தில் 2.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.

சாலை அமைப்பதற்காக 90 சதவீதம் பேர் தாமாகவே முன்வந்து தங்களது நிலங்களை கொடுத்தனர். மீதமுள்ள 10 சதவீத நிலம் மட்டுமே நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்படுவதன் மூலம் கோவை சாலையில் போக்குவரத்து நெருக்கடி குறையும். குறிப்பாக, ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகமாக இருக்கக்கூடிய ராமகிருஷ்ணபுரம், செங்குந்தபுரம், காமராஜபுரம், வையாபுரி நகர் பகுதிகளில் இருந்து வேறு இடங்களுக்கு செல்ல கோவை சாலையில் மட்டுமே செல்ல இயலும். குளத்துப்பாளையம் குகை வழிப் பாலமும் இந்த இணைப்புச்சாலையில் இணைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வீட்டுவசதி வாரியத்தின் மூலம் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதன் அடிப்படையில் கரூர் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்துதான் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. ரூ.13 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் கரூர் நகராட்சிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கழிவுநீர் தேங்காத வகையில் வடிகால் அமைக்கப்பட உள்ளது. கரூர் மற்றும் குளித்தலையில் புதிதாக பஸ் நிலையங்கள் விரைவில் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுகையில், கரூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளை இணைக்கும் வகையில் ரூ.77 கோடியில் சுற்று வட்ட சாலைகள் அமைக்கப்பட உள்ளது. திருச்சி முதல் கோவை வரை ரூ.3,500 கோடியில் பசுமை வழி விரைவுச்சாலை அமைக்கப்பட உள்ளது. புஞ்சை புகளூரில் ரூ.490 கோடியில் 1 டி.எம்.சி நீரைத் தேக்கும் வகையில் தடுப்பணை அமைக்கப்பட இருப்பது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் அட்லஸ் எம்.நாச்சிமுத்து கூறுகையில், அம்மா சாலையானது கரூர் பகுதியிலுள்ள 20 சாலைகளை இணைக்கும் வகையில் உள்ளதால், இனி வரும் காலங்களில் ஏற்றுமதியாளர்களுக்கு உற்பத்தி பொருட்கள், மூலப்பொருட்களை கொண்டு செல்வது, தொழிலாளர்கள் எளிதில் நிறுவனத்திற்கு வேலைக்கு வருவதற்கும் சவுகரியமாக இருக்கும். குறிப்பாக கரூர் ரெயில் நிலையத்திலிருந்து சேலம் புறவழிச்சாலைக்கு செல்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும். இதனால், பஸ் நிலையத்தில் வாகன நெருக்கடி குறையும். விபத்துகளும் குறையும். வெங்கமேடு, இனாம் கரூர் பகுதி மக்களுக்கும், கரூர் பகுதி மக்களுக்கும் இந்த சாலை வரப்பிரசாதம் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கருணை அடிப்படையில் 15 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நகராட்சிக்குட்பட்ட நரசிம்மபுரம் நடுத்தெரு, தெற்கு காந்தி கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை மேம்பாட்டு பணிகள், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட ரூ.17 கோடியே 72 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கும் பூமிபூஜை போடப்பட்டது.

இதில், ம.கீதா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜேந்திரன் மற்றும் அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.திருவிகா, மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, சக்தி கோச் ஆர்.நடராஜன், தொழில் அதிபர்கள் சோபிகா சிவசாமி, வி.கே.ஏ.கருப்பண்ணன், இமயம் சிவசாமி, கட்சியின் மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.கண்ணதாசன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கே.கமலக்கண்ணன், கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன், ரைஸ் பாலகுருசாமி, நகர எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஆயில் ரமேஷ், மாணவர் அணி முன்னாள் செயலாளர் என்.தானேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story