ஈரோடு வெண்டிபாளையத்தில் குப்பை கிடங்கை அகற்ற நடவடிக்கை மாநகராட்சி அதிகாரி தகவல்


ஈரோடு வெண்டிபாளையத்தில் குப்பை கிடங்கை அகற்ற நடவடிக்கை மாநகராட்சி அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 19 Feb 2019 10:30 PM GMT (Updated: 19 Feb 2019 9:39 PM GMT)

ஈரோடு வெண்டிபாளையத்தில் குப்பை கிடங்கை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி உதவி ஆணையாளர் தெரிவித்தார்.

ஈரோடு,

ஈரோடு வெண்டிபாளையத்தில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் வாகனங்கள் மூலமாக தினமும் வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு மலைபோல் குப்பை குவிந்து கிடக்கிறது.

இந்த குப்பையில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால் அங்கிருந்து புகை வெளிவந்த வண்ணம் உள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே வெண்டிபாளையத்தில் உள்ள குப்பை கிடங்கை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக குப்பைக்கிடங்கில் தீப்பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. தீயை அணைக்க தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இருந்தாலும், குப்பைக்கிடங்கில் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில் குப்பைக்கிடங்கில் குப்பை கொட்டுவதை நிறுத்தவும், ஏற்கனவே அங்குள்ள குப்பைகளை அகற்றவும் ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி உதவி ஆணையாளர் அசோக்குமார் கூறியதாவது:–

வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்து வருகிறோம். குப்பை அதிகமாக இருப்பதால் ஓரிரு நாட்களில் தீ அணைக்கப்பட்டுவிடும். இனி வரும்காலத்தில் அங்கு குப்பை கொட்டப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு பதிலாக 2 வார்டுகளுக்கு ஒரு இடத்தில் குப்பை பிரித்தெடுக்கும் மையம் அமைக்கப்படும். அங்கு மட்கும், மட்காத குப்பைகள் பிரித்தெடுத்து உடனுக்குடன் உரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் குப்பைகள் சேகரமாவது முழுவதுமாக தடுக்கப்படும்.

ஏற்கனவே குப்பைக்கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்ற ‘பயோ மைனிங்’ என்ற புதிய திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கிலேயே கருவிகள் அமைக்கப்பட்டு, அங்கேயே குப்பை பிரித்தெடுக்கப்படும். இதனால் 3 ஆண்டுகளில் அனைத்து குப்பைகளும் அழிக்கப்படும். இதைத்தொடர்ந்து குப்பை கிடங்கு அங்கிருந்து முழுமையாக அகற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story