திருப்பூரில் கட்டையால் அடித்து வாலிபர் கொலை சமையல் தொழிலாளி கைது


திருப்பூரில் கட்டையால் அடித்து வாலிபர் கொலை சமையல் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 19 Feb 2019 11:00 PM GMT (Updated: 19 Feb 2019 10:07 PM GMT)

திருப்பூரில் கட்டையால் அடித்து வாலிபரை கொலை செய்த சமையல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் பழைய பஸ் நிலையம் பின்புறம் சமையல் தொழிலாளர்கள் அதிகம் பேர் ரோட்டோரம் தங்கியிருந்து ஓட்டல்கள் மற்றும் விசே‌ஷ வீடுகளுக்கு சென்று சமையல் தொழில் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு அருகே சமையல் தொழிலாளி ஒருவர் தலை உடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை அங்கிருந்தவர்கள் பார்த்து உடனடியாக திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து சென்று படுகாயத்துடன் கிடந்தவரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காயமடைந்தவர் சிவகங்கையை சேர்ந்த சுரேஷ்(வயது 32) என்பதும், சமையல் தொழிலாளியான இவர் திருப்பூர் பழைய பஸ் நிலையம் பின்புறம் ரோட்டோரம் தங்கியிருந்து சமையல் வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுரேசுடன் இருந்த 10 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த ரவிச்சந்திரன்(40) என்பவரும், சுரேசும் நேற்று முன்தினம் இரவு மது அருந்தியது தெரியவந்தது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் சுரேஷ், ரவிச்சந்திரனின் பையில் இருந்த ஆயிரம் ரூபாயை எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இரவு மது வாங்கி கொடுத்த பிறகும், ரவிச்சந்திரனிடம் பணம் கேட்டு சுரேஷ் தொந்தரவு செய்ததால் அவர்களுக்குள் மோதல் முற்றியது. கோபமடைந்த ரவிச்சந்திரன் அங்கு கிடந்த மரக்கட்டையால் சுரேசின் தலையில் அடித்தது தெரியவந்தது.

பின்னர் ரவிச்சந்திரன் அங்கிருந்து புறப்பட்டு பாண்டியன் நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வேலைக்கு சென்று விட்டார். அதன்பிறகு போலீசார் ரவிச்சந்திரனை பிடித்தனர். அவரும் மேற்கண்ட சம்பவத்தை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி சுரேஷ் இறந்தார். பின்னர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.


Next Story