ராமேசுவரத்தில் நவீன வசதி கொண்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது


ராமேசுவரத்தில் நவீன வசதி கொண்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
x
தினத்தந்தி 19 Feb 2019 11:00 PM GMT (Updated: 19 Feb 2019 10:21 PM GMT)

ராமேசுவரத்தில் நவீன வசதி கொண்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக முக்கிய தொழிலாக மீன்பிடி தொழில் இருந்து வருகிறது. ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள கடற்பகுதி குறுகியதாக உள்ளதாலும், மீன்வளம் குறைந்து காணப்படுவதாலும் இந்திய மீனவர்கள் அடிக்கடி சர்வதேச கடல் எல்லை பகுதியில் மீன்பிடிக்க செல்வதால் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டியடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த பிரச்சினையால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தீர்வு காண மாற்றுத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதன்படி மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட புதிய திட்டம் வகுக்கப்பட்டது. கடந்த 2017–ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 12 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுவதற்காக சம்மதம் தெரிவித்தனர். அதன்படி இதற்கான சிறப்பு படகுகள் கட்டுமான பணி கொச்சியில் உள்ள துறைமுகத்தில் நடந்தது. ரூ.81½ லட்சம் மதிப்புள்ள ஒரு படகுக்கு மத்திய அரசு 50 சதவீத மானியமும், மாநில அரசு 20 சதவீத மானியமும், வங்கி கடனுதவி 20 சதவீதமும் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 10 சதவீத தொகையை, மீனவர் பங்களிப்பு தொகையாக செலுத்த வேண்டும்.

கடந்த 2018–ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட படகுகள் கட்டுமான பணி முடிவடைந்து 4 படகுகள் தயார் நிலையில் உள்ளன. இந்த படகுகள் மீனவர்கள் ஜேசு இருதயராஜ், வின்னரசன், ஆனந்தபைவா, ரைஜில் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 22.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த நவீன படகில் மீன்களை பதப்படுத்தும் வசதி, மீனவர்கள் தங்கும் வசதி, நவீன தகவல் தொழில் நுட்ப வசதி, 8 முதல் 10 பேர் வரை தங்கும் வசதி, தொலைவில் உள்ள கடல் பகுதிகளுக்கு சென்று 10 நாட்களுக்கு மேல் தங்கி மீன்பிடிக்கும் வசதி போன்றவை உள்ளது. இந்த ஆழ்கடல் மீன்பிடிப்பில் டூனா இன மீன்கள் அதிக அளவில் பிடிபடும். இவற்றுக்கு வெளிநாடுகளில் அதிக மவுசு உள்ளது.

எனவே மீனவர்களுக்கு வருவாய் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இலங்கை கடற்படையினரின் தாக்குதல் இல்லாமல் மீனவர்கள் மீன்பிடிக்கலாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story