மராட்டியத்தில் ஜூனியர் கல்லூரி ஆசிரியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பாதிக்கும் அபாயம்


மராட்டியத்தில் ஜூனியர் கல்லூரி ஆசிரியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பாதிக்கும் அபாயம்
x
தினத்தந்தி 19 Feb 2019 11:45 PM GMT (Updated: 19 Feb 2019 11:39 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் 75 ஆயிரம் ஜூனியர் கல்லூரி ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் குதிக்கின்றனர். இதன் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் உள்ள ஜூனியர் கல்லூரிகளில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தங்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை படி சம்பளம் வழங்கவேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கடந்த 2 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்தனர். கடந்த டிசம்பர் மாதம் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தினார்கள்.

இந்தநிலையில், கடந்த 31-ந்தேதி ஜூனியர் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மாநில கல்வித்துறை மந்திரி வினோத் தாவ்டேயை சந்தித்து தங்களது கோரிக்கைகள் தொடர்பாக பேசினார்கள். அப்போது, ஜூனியர் கல்லூரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக 10 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக மந்திரி உறுதி அளித்து இருந்தார்.

மந்திரி உறுதியளித்து 10 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், மாநில அரசிடம் இருந்து ஆசிரியர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது தொடர்பாக எந்தவொரு சாதகமான பதிலும் வரவில்லை. இதனால் ஜூனியர் கல்லூரி ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

இந்தநிலையில், நாளை(வியாழக்கிழமை) முதல் ஜூனியர் கல்லூரி ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அதிரடியாக அறிவித்து உள்ளனர்.

நாளை மாநிலம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. மும்பை, புனே, கோலாப்பூர், கொங்கன், நாசிக், அவுரங்காபாத், அமராவதி, நாக்பூர், லாத்தூர் என 9 கோட்டங்களில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத இருக்கின்றனர். ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் எச்சரிக்கை காரணமாக பொதுத்தேர்வு பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி ஜூனியர் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர் அனில் தேஷ்முக் கூறியதாவது:-

கல்வித்துறை மந்திரி வினோத் தாவ்டே எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து நிதி அமைச்சகத்துடன் பேசி 10 நாட்களில் முடிவு எடுப்பதாக உறுதி அளித்து இருந்தார்.

கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கையில் வாய்மொழி மற்றும் செய்முறை தேர்வு பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். ஆனால் கல்வித்துறை மந்திரி சொன்னபடி எதுவும் நடக்கவில்லை. எனவே நாளை தொடங்கும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளையும், விடைத்தாள் திருத்தும் பணியையும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளோம்.

அதற்குள் மாநில கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம். மாணவர்கள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் நாங்கள் விரும்பவில்லை, என்றார்.

Next Story