சென்னிமலை அருகே பரபரப்பு கியாஸ் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்தது பெரும் விபத்து தவிர்ப்பு


சென்னிமலை அருகே பரபரப்பு கியாஸ் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்தது பெரும் விபத்து தவிர்ப்பு
x
தினத்தந்தி 20 Feb 2019 10:00 PM GMT (Updated: 20 Feb 2019 8:42 PM GMT)

சென்னிமலை அருகே கியாஸ் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது. உடனே தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சென்னிமலை,

சென்னையில் இருந்து கோவை நோக்கி சமையல் கியாஸ் நிரப்பிய லாரி நேற்று காலை 10 மணியளவில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை வழியாக சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி சென்னிமலை ஈங்கூர் ரோட்டில் உள்ள அண்ணா நகர் என்ற இடத்தில் சென்றபோது லாரியின் பின் சக்கரத்தில் இருந்த இரும்பு கம்பி உடைந்து விட்டது. இதனால் உராய்வு ஏற்பட்டு திடீரென தீ பற்றியது.

இதனை கவனிக்காத டிரைவர் தொடர்ந்து லாரியை ஓட்டியபடி சென்றுள்ளார். இதை லாரியின் பின்னால் வந்தவர்கள் கவனித்து சத்தம் போட்டனர். உடனே டிரைவர் லாரியை நிறுத்தி இறங்கினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் இருந்த தீ தடுப்பாணை எடுத்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்தார். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. அந்த பகுதியில் உள்ள டீ கடையில் இருந்தவர்களும் தண்ணீரை ஊற்றி மேலும் தீ பரவாமல் தடுத்தனர்.

இதுபற்றி சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அதிகாரி மணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து லாரி முழுவதும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட லாரி நின்ற இடத்தின் மிக அருகிலேயே 2 பெட்ரோல் பங்குகள் உள்ளது. அதனால் கியாஸ் லாரியில் தீ பரவி ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால் சென்னிமலை நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கும். உடனே தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


Next Story