பிரம்மதேசம் அருகே, கோவில் குளத்தில் மூழ்கி மாணவன் சாவு


பிரம்மதேசம் அருகே,  கோவில் குளத்தில் மூழ்கி மாணவன் சாவு
x
தினத்தந்தி 21 Feb 2019 4:00 AM IST (Updated: 21 Feb 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

பிரம்மதேசம் அருகே கோவில் குளத்தில் மூழ்கி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பிரம்மதேசம்,

திண்டிவனம் அருகே உள்ள நொளம்பூர் அய்யனாவரம் கிராமத்தை சேர்ந்தவர் எத்திராஜ். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 32). இவர்களுக்கு மணிகண்டன்(10) என்ற மகன் இருந்தான். எத்திராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மணிகண்டன் நொளம்பூர் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் பிரம்மதேசம் அடுத்த பெருமுக்கல் கிராமத்தில் 1,500 அடி உயரம் கொண்ட மலை மீது அமைந்துள்ள முக்தியாஜல ஈஸ்வரர் கோவிலில் நடந்த மாசிமக திருவிழாவை காணவும், சாமி தரிசனம் செய்வதற்காகவும் நேற்று முன்தினம் ராஜேஸ்வரி தனது மகனுடன் சென்றார்.

அப்போது மணிகண்டன் கோவில் அருகே உள்ள தீர்த்தகுளத்தில் கை, கால்களை கழுவி விட்டு வருவதாக ராஜேஸ்வரியிடம் கூறிச் சென்றான். பின்னர் அவன் கோவிலுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி தீர்த்தகுளம் மற்றும் கோவில் பகுதியில் தேடியும் மணிகண்டனை காணவில்லை.

இதையடுத்து மாயமான தனது மகனை கண்டுபிடித்து தருமாறு ராஜேஸ்வரி பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை கோவில் அருகே உள்ள தீர்த்தகுளத்தில் மணிகண்டன் பிணமாக மிதப்பதாக பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில் கை, கால்களை கழுவுவதற்காக சென்ற மணிகண்டன் குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாயுடன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story